அன்புள்ள தோழர் அஞ்சலி அவர்களுக்குத் தோழமை வணக்கம். உங்களின் மடல் கிடைத்தது. அனுப்புநர் முகவரிப் பகுதியில் உங்களின் பெயரை திருமதி அஞ்சலி நாகராசன் என எழுதியிருந்ததைக் கண்டு சிறிது அதிர்ந்துதான் போனேன். நாகராசன் என்பது உங்கள் கணவர் பெயர்தான் என்பதை நான் நன்றாகவே அறிவேன். திருமணத்திற்குமுன் தாங்கள் எழுதிய மடல்களிலெல்லாம் தாங்கள் அஞ்சலி என்று மட்டும்தானே குறிப்பிட்டு வந்தீர்கள். திருமணத்திற்குப் பிறகு ஏன் இந்தத் தேவையில்லாத வால் முளைத்தது என்பது எனக்கு இன்னும் விளங்கவே இல்லை.
சமூக நடைமுறையில் உள்ள வழக்கம்தானே இது என்று நியாயப்படுத்தப் போகிறீர்களா அஞ்சலி? மேல்தட்டுப் பெண்களிடம் ஊறிப்போன நடைமுறையாகிவிட்ட இச்செயல், நடுத்தர வர்க்கத்துப் பெண்களிடமும் விரைவாகத் தொற்றிவரும் இந்நோய், தங்களையும் தொற்றிக் கொண்டதில்தான் எனக்கு வியப்பும் அதிர்ச்சியும் மேலிடுகிறது. சராசரிப் பெண்கள் இதுபோல் எழுதுவதை வேண்டுமானால் பிற பெண்கள் இப்படி எழுதுவதைப் பார்த்து நாகரிகம் என நினைத்துக் கொண்டு எழுதுகிறார்கள் என எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால், தாங்கள் அப்படியான சராசரிப் பெண் அல்லவே அஞ்சலி!
பெண்களின் நிலை பற்றியும், பெண்கள் ஒடுக்கப்படுவது பற்றியும் ஆணாதிக்கச் சமூக நடைமுறை பற்றியும் விரிவாகவும் ஆழமாகவும் மணிக்கணக்கில் பேசுவீர்களே! விவாதிப்பீர்களே.
இதுவும் ஒரு ஆணாதிக்க நடைமுறைதான், பெண்ணடிமைத் தனத்தின் கூறுகளில் ஒன்றுதான் என்பதை, ஏன் அறியாமல் போனீர்கள்? உங்கள் கணவர் இந்தச் சமூகத்திற்கு "அறிமுகப்படுத்தப் படுகிறபோதோ, அறியப்படுகிறபோதோ நாகராசனாக மட்டுமே அறிமுகப்படுத்தப்படுகிறார்; அறியப் படுகிறார். ஆனால் நீங்கள் மட்டும் திருமதி அஞ்சலி நாகராசன் என்று அறிமுகப்படுத்தப்படுகிறீர்கள். திருமதி என்பதன் மூலம் நீங்கள் மணமானவர் என்பதும், உங்கள் பெயருக்குப் பின் உங்கள் கணவர் பெயரை இணைப்பதன் மூலம் நீங்கள் யாருக்கு மணமானவர் என்பதும் அறியப்பட்டு விடுகிறதே!
பெண் ஆணுக்கான போகப்பொருள் என்கிற மதவியல் கருத்துகளின் மறுவடிவம்தானே இது! ஆணாதிக்கக் கருத்தியல்களின் நவீன வெளிப்பாடுதானே இது! இன்னும் ஒருபடி மேலே போய் (Mrs. Nagarajan) திருமதி நாகராசன் என்று ஒரு பெண் தன் சுயத்தை சிந்தனையை மட்டுமல்ல தன் பெயரைக்கூடத் தொலைக்கும் அவலம் கூட நேர்ந்துவிடுகிறது. இவற்றை யெல்லாம் தாங்கள் உணராமல் போனது ஆச்சரியமே.
திருமணத்திற்கு முன்னும் பின்னும் நாகராசன்
திரு. நாகராசன்தான். ஆனால் அஞ்சலி மட்டும் திருமணத்திற்கு முன்பு செல்வி அஞ்சலியாக இருந்தவர் திருமணத்திற்குப்பின் திருமதி அஞ்சலி. ஒரு பெண் தன் பெயரைச் சொல்வதிலிருந்தே, எழுதுவதிலிருந்தே அவள் திருமணமானவரா, ஆகாதவரா என அறியப்பட வேண்டும் என்கிற அவலச் சிந்தனைக்கு ஆட்பட்டு விட்டீர்களே.
திருமணமாகாத பெண்களை “Miss” என்றும் திருமணமான பெண்களை “Mrs” என்றும் குறிப்பிடுவது பெண்களுக்கெதிரான ஆணாதிக்க நடைமுறை என உணர்ந்து கொண்ட பெண்ணியவாதிகள் மணமான, மணமாகாத பெண்கள் அனைவருக்கும் பொதுவாக Ms. என்ற பொது அடை மொழியைப் பயன்படுத்துகின்றனர். “CHAIRMAN” என்ற சொல் ஒரு ஆணை மய்யப்படுத்தி ஏற்படுத்தப்பட்ட சொல் என்பதனால் “CHAIRPERSON”என்ற சொல்லைப் பெண்ணியவாதிகள் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
இந்த அளவுக்கு பெண்ணியச் சிந்தனைகள் கூர்மைப்பட்டு வருகின்றன என்பதை நீங்கள் அறிவீர்களா ? இன்னும் சில பெண்கள் இப்படிக் கூறுவார்கள், "நானாக விரும்பித்தான் என் பெயருக்குப் பின் என் கணவர் பெயரைச் சேர்த்து எழுதுகிறேன், என்னுடைய வெற்றிக்குப் பல வழிகளிலும் என் கணவர் ஒத்துழைக்கிறார்; அன்பின் வெளிப்பாடாகத்தான் இப்படி எழுதுகிறோம்'' என்று பத்தாம்பசலித்தனமாக உளறுவார்கள்.
இப்படிக் கூறுபவர்களை நோக்கி ஒன்று கேட்கிறேன்; ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருப்பதாக நமது கதைகளும், காவியங்களும், இலக்கியங்களும், திரைப்படங்களும் கூறுகின்றனவே! பெண் எப்போதுமே ஆணுக்குப் பின்னால் ஏன் இருக்கிறாள் என்பதை பெண்கள் எப்போதாவது எண்ணிப் பார்க்கிறார்களா?
தன் வெற்றிக்கு உறுதுணையாய் இருப்பதற்காக மனைவி பெயரைத் தன் பெயரோடு இணைத்தெழுதும் ஆண்கள் உண்டா? கூறுங்கள். எங்கோ ஓரிருவர் உண்டு என்பதை நானும் அறிவேன்; விதிவிலக்குகள் விதியாகமாட்டா என்பதை உணருங்கள், யாருக்காகவும் யாரும் தங்கள் தனித்தன்மையை இழக்க வேண்டியதில்லை. கணவன் அவர் பெயரால் மட்டுமே, மனைவி அவர் பெயரால் மட்டுமே அறியப்படப்படும். தங்கள் பெயருக்குப் பின் தங்கள் கணவர் பெயரைச் சேர்த்து எழுதியது சரியானதுதான் என்றால் அதற்கான நியாயமான காரணங்களோடும், தவறென்றுபட்டால் உங்கள் பெயரை அஞ்சலி என்று மட்டுமே குறிப்பிட்டு எழுதப்படும் தங்களின் அடுத்த மடலை ஆவலோடும் எதிர்பார்க்கும்.
பி.இரெ. அரசெழிலன்
No comments:
Post a Comment