Friday, May 16, 2008

தாலி என்னும் மோசடி - வி.சி.வில்வம்

பெரியாரால் அறிமுகப்படுத்தப்பட்ட சுயமரியாதைத் திருமணத்தில் ‘தாலி’ என்கிற அடிமைச் சின்னம் கிடையாது. பண்டையத் தமிழர் திருமணங்களிலும் தாலி என்பது இல்லை. இடையில் ஏற்பட்ட தவறான பழக்கமே இது. தாலி கட்டுவதன் அவசியத்தை பழமைவாதிகளே உயர்த்திப் பிடிக்கிறார்கள்.

தாலி என்பது புனிதச் சின்னம். ஒரு பெண்ணுக்குத் திருமணம் முடிந்துவிட்டது என்பதற்கான அடையாளம். தாலி என்பது பெண்ணுக்குப் பாதுகாப்பு என்பதும் அவர்களின் வாதம்.

தாலி என்பது அடிமைச் சின்னமே தவிர வேறல்ல. ஐம்பது காசு மதிக்கத்தக்க மஞ்சள் கயிறும் ஐந்து கிராம் தங்கத்தையும் தவிர அதில் வேறெதுவும் கிடையாது. அந்தத் தாலி எந்தவிதத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பைத் தருகிறது என்பது புரியாததாகவே இருக்கிறது.

சாலையில் செல்லும்போது கழுத்தில் தாலி உள்ளவர்களை எல்லாம் கிண்டல் செய்யாமல் இருக்கிறார்களா? இருபொருள் படப் பேசாமலிருக்கிறார்களா? அல்லது பாலியல் வன்முறைக்கும் பாலுறவு வன்கொடுமைக்கும் அவர்களை ஆட்படுத்தாமல் இருக்கிறார்களா? இவற்றிற்கெல்லாம் பழமைவாதிகளின் பதில் என்ன?

தாலி அணிவது ஒழுக்கத்தின் சின்னம் என்று சொன்னால் வெளிநாடுகளில் தாலி என்பதே கிடையாது. தாலி அணியாத அப்பெண்கள் ஒழுக்கம் இல்லாதவர்களா? இன்னும் சொல்லப் போனால், வெளிநாடுகளில் இரவு நேரங்களில் பெண்கள் தனிமையில் சென்று வரக்கூடிய வாய்ப்பிருக்கிறது. ஆனால் இந்தப் புண்ணிய(?) பூமியில் அந்தப் புனிதச் சின்னத்தைக் கழுத்தில் மாட்டிக் கொண்டாலும் சரி, எங்குமே அப்பெண்கள் தனியே சென்றுவர முடியாது என்பதுதான் சோகம். சமயங்களில் புனிதம் என்றும் பாதுகாப்பு என்றும் கருதப்படுகிற அந்த ‘அடிமைச் சின்னத்தையே’ கொள்ளையடித்துப் போய்விடும் நிகழ்ச்சிகள் தான் ஏராளமாக நடக்கின்றன. பிறகென்ன புனிதம் என்றும் பாதுகாப்பு என்று பசப்பு வசனங்கள்?
தாலி என்பது அடங்கிப் போவதற்கும், அச்ச மூட்டுவதற்கும், அடிமைப்படுத்துவதற்குமேயன்றி வேறெதற்கும் இல்லை. திருமணம் ஆனதற்கு ‘தாலி’தான் பெண்களின் அடையாளம் எனில், ஆண்களுக்கு என்ன அடையாளம் இருக்கிறது?

கணவனை இழந்த பெண்களுக்கு வெள்ளைச் சேலை உடுத்தி, பூ, பொட்டை மறுத்து, ‘விதவை’ என்னும் பெயர்சூட்டி வெளியில் போய்வர அனுமதி மறுக்கிறோம். ‘முண்டச்சி’ என்கிற கொச்சைத் தன்மான பட்டத்தைக் கொடுத்து அவர்களைக் காண்பதே அபசகுனம் என்கிறது மூடத்தனத்தில் ஊறிய சமூகம். இதேபோன்று மனைவியை இழந்த ஆண்களுக்கு ஏதாவது பெயர் இருக்கிறதா? மேற்குறிப்பிட்டது போன்று கொடுமைகள் நிகழ்கிறதா?

ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனி நியாயம். இதென்ன அநியாயம்? கணவன் இறந்தால் தாலியைக் கழற்ற மாட்டார்கள்- அறுத்தெறிவார்கள். பொட்டை அழிப்பார்கள்; பூவை இழுப்பார்கள்; வளையலை உடைப்பார்கள். கணவன் இறந்து போன வேதனையில் இருக்கும் பெண்ணை அலங்கோலப்படுத்தி துன்புறுத்திக் கொடுமை செய்வார்கள். காட்டுமிராண்டிக் காலத்தில் செய்துவந்த பழக்கங்களைக் கணினிமயக் காலத்திலும் செய்கிற பைத்தியக்கார மனிதர்கள்.

எந்தத் தாலியைப் புனிதம், அடையாளம், பாதுகாப்பு என்று கருதி வந்தார்களோ அந்தத் தாலியையே அறுத்தெறிவதற்கும் காரணம் என்ன? கணவன் இருக்கும் வரை சுமப்பது இறந்த பின் அறுப்பது. ஆக அந்தப் பெண் கணவனைச் சார்ந்து வாழவே பயிற்றுவிக்கப்படுகிறாள். கணவன் இறந்த பிறகு அப்பெண்ணுக்கு எதுவுமே இருக்கக் கூடாது. அழகான பெண்ணை அலங்கோலமாக்கி மூலையில் அமரச் செய்து விடுவார்கள். அப்பெண் யார்மீதும் ஆசை வைத்து விடக்கூடாது; அப்பெண்ணின் மீதும் யாரும் ஆசை வைத்து விடக் கூடாது. அவளது இன்ப வாழ்க்கை முடிவடைந்தது என்பதற்கான ஏற்பாடே இது.

இம்மூடத்தனமான ஏற்பாடுகளை முறியடிக்கத் தமிழ்ப் பெண்கள் அணி திரள வேண்டும்.

நன்றி ‘நாளை விடியும்’


நன்றி* புதிய பெண்ணியம் அக்தோபர் 2006

No comments: