‘பெரியார் திரைப்படம் : ஒரு பெரியாரியப் பார்வை' என்னும் எனது நூலின் மீதான தோழர் முழுமதியின் திறனாய்வு, ‘‘ஒரு பெரியாரியப் பெண்ணியப் பார்வை'' என்னும் தலைப்பில், கடந்த இதழில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
நூலில் இடம்பெற்ற, ‘பெரியார்' திரைப்படம் குறித்த எனது விமர்சனங்களை ஏற்றுக் கொண்ட அத்திறனாய்வு, பெரியாரியச் சிந்தனையாளர்களுக்கு அவசியமான நூலென பரிந்துரை செய்திருந்தது. இதற்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளையில், திறனாய்வின் மய்யப்புள்ளியான மணியம்மை குறித்த கருத்துக்கள் பற்றி, எனது கருத்துக்களைப் பதிவு செய்தாக வேண்டும்.
மணியம்மையின் பெருமைகளாக, ‘23 வயதில் பெரியாரின் தொண்டர் ஆனவர் ; ‘மிசா' காலத்தில் அமைப்புக்குத் தலைமைத் தாங்கியவர் ; மனோபலமும் கொள்கைப் பிடிப்பும் கொண்டவர் ; சாதி ஒழிப்பு, தமிழ்மொழி உரிமை, ‘இராவணலீலா', இந்திரா காந்திக்குக் கருப்புக் கொடி ஆகிய போராட்டங்களை நடத்தி கைதானவர்'' என்று எழுதி, மணியம்மையை, ‘‘மகத்துவம் வாய்ந்த பெண்மணியாக'' அறிவிக்கும் தோழர் முழுமதி, தலித் தோழரின் மாட்டுக் கொட்டகையின் சாண நாற்றத்தை சகித்துக் கொள்ளத் தேவையற்ற மேட்டுக்குடிப் பெண்ணாகவும், உடல் வேட்கையை முதன்மைப்படுத்திக் கொள்ளும் சராசரிப் பெண்ணாகவும் அடையாளப்படுத்துவது முரண்பாடானதாகும்.
இந்த சுய முரண்பாடு, தோழர் முழுமதி, தனது திறனாய்விற்கு அடிப்படையாகக் கொண்ட கருத்தியலிலிருந்து உருவாகியிருக்கிறது. அவர், மணியம்மையை அரசியல் ரீதியாக அணுகாமல், தனிமனித உணர்வு ரீதியாக அணுகியிருக்கிறார். எனவே, திறனாய்வுக்கான தளம் மாறுபட்டதால், அதன் வழி பெறப்பட்ட முடிவுகளும் அவ்வாறே அமைந்திருப்பதில் ஆச்சரியமில்லை.
இதற்கு, ‘‘மணியம்மையாரின் உணர்வு ரீதியிலான பிழையினை முப்பதாண்டுகள் கழித்தும் மறக்க முடியவில்லை என்பதை என்னவென்று சொல்வது? எப்படித்தான் ஏற்பது?'' என்னும் தோழர் முழுமதியின் வினாக்களையே சான்றாகக் கொள்ளலாம்.
தோழர் முழுமதியின் கருத்துப்படி இத்தகையப் புரிதலுக்கு வரலாம்: 23 வயதில் பெரியார் தொண்டராகி, ஆறு ஆண்டுகளுக்குள் பெரியாரின் நம்பிக்கையைப் பெற்ற மணியம்மை, 1949ல் பெரியாரை மணந்துகொண்டு பல வருடங்கள் ஆன நிலையில், கிராமச் சூழலுக்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்ள முடியவில்லை அல்லது தேவையில்லை; தலித் விவசாயக் கூலியின் வாழ்நிலையை உள்வாங்கிக் கொள்ளவும் இயலவில்லை அல்லது அவசியமில்லை!
ஆனால், திரைப்படக் காட்சி, ஒரு கற்பனைக் காட்சி என்று விளக்கவும், அக்காட்சி அமைக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறவில்லை என்று உணர்த்தவும், காட்சியை முன்வைத்து எழுதப்பட்ட நூலின் கருத்துக்களில், மணியம்மை மீது திரைப்படக்காட்சி கடந்த விமர்சனம் எதுவும் இடம்பெறவில்லை. இருப்பினும், ‘‘மணியம்மையாரைச் சாடித் தீர்க்கிறார்'' என்னும் தோழர் முழுமதியின் குற்றச்சாட்டிலிருந்து என்னால் தப்பிக்க முடியவில்லை.
ஏனெனில், ‘பெரியார்' திரைப்படம் மற்றும் எனது நூல் ஆகிய இரண்டு பரப்புகளுக்கும் அப்பால், தோழர் முழுமதியின் திறனாய்வுப் பரப்பு விரிகிறது. அதற்குக் காரணமாக, ‘‘மணியம்மையார் மதிப்பிற்குரியவர், போற்றுதலுக்குரியவர் என்பதில் நமக்கு அன்றும் இன்றும் ஏன் என்றுமே மாற்றுக்கருத்து வருவதற்கான வாய்ப்பு இல்லவே இல்லை'' என்னும் அவரது உறுதியான முன்முடிவு செயலாற்றுகிறது.
அதனால்தான், உழைக்கும் மக்களின் வறுமை, வியர்வை, சுகாதாரமற்ற, வாழ்நிலை போன்றவற்றை மணியம்மை உள்வாங்கிக் கொள்ளவில்லை என்னும் கொள்கை சார்ந்த எனது விமர்சனத்தை, குளிப்பது, சுத்தமான ஆடை அணிவது, முகம் கழுவுவது ஆகிய அன்றாட வெளித்தூய்மை செயல்களோடு ஒப்பிடுகிறார், தோழர் முழுமதி.
தனது நிலைப்பாட்டிற்கு எதிராக இயங்கிய, பெரியாருக்கு நெருக்கமான இரண்டாம் நிலைத் தலைவர்களை, பெரியார் மூலமாகவே படிப்படியாகக் கழகத்தைவிட்டு மணியம்மை நீக்கியதையும், பெரியாரின் மரணத்துக்குப் பிறகு அத்தகைய செயற்பாடு தீவிரமடைந்ததையும் வரலாறு சொல்கிறது. இவ்வாறு, பெரியார் இயக்கத்தை அழித்த துரோக வரலாற்றை அம்பலப்படுத்தும் முகமாக, தோழர் வே.ஆனைமுத்து எழுதி 1.1.1997ல் பெரியார் நூல் வெளியீட்டகத்தாரால் பதிப்பிக்கப்பட்ட, ‘தந்தை பெரியார் மறைவுக்குப்பின் பெரியார் கொள்கைகளுக்குக் குழிதோண்டிய திராவிடர் கழகம் : அசைக்க முடியாத வரலாற்று ஆவணச் சான்றுகளுடன்' என்னும் நூலிலிருந்து சில மேற்கோள்கள் எனது நூலில் எடுத்தாளப்பட்டன.
மேலும், அந்த விமர்சனத்தின் இறுதியில், ‘‘வே.ஆனைமுத்துவின் கருத்துக்கள் பெரியாருடன் மணியம்மை மற்றும் வீரமணி ஆகியவர்கள் பழகிய விதத்தினையும் அதனால் பெரியார் பட்ட பாட்டினையும் சான்றுகளாக முன்வைத்துள்ளன'' (பக்கம்-48) எனவும் எழுதப்பட்டது.
ஆனால், ‘‘தன்னை விடவும் வயதில் 42 ஆண்டுகள் பெரியவரான ஒரு முதியவரைக் கொள்கை வேகத்தோடு கைப்பிடிக்கும் ஓர் இளம்பெண் காலம் முழுதும் ஆண்வாடையே படாமல் இருந்திருக்க வேண்டும்'' என்று எனது நூல் வலியுறுத்து வதாக தோழர் முழுமதி சொல்கிறார். இது, முழுமையைப் பார்க்காமல் பகுதியைப் பார்க்கும் போக்காகும்.
ஆகவேதான், ஒரு மாபெரும் மக்கள் இயக்கத்தின் வீழ்ச்சி பற்றி அக்கறையோடு ஆய்வுக்குட்படுத்தும் எனது எழுத்துக்களை, மணியம்மை என்னும் பெண்ணின் தனிமனித உணர்வுகள், முக்கியமாக பாலுணர்வு மீதான, ‘‘ஒற்றைச் சார்புப் பார்வை'' என்பதாக தோழர் முழுமதி புரிந்துகொள்கிறார். அதனால்தான், மணியம்மையின் அரசியல் பிழைகளையும், அவரது நடவடிக்கைகளால் பெரியார் இயக்கத்துக்கு ஏற்பட்ட பின்னடைவையும் கணக்கில் கொள்ளாமல், அவரது உடல் வேட்கையை முன்னிலைப்படுத்த வேண்டும் என்று தோழர் முழுமதி கருதுகிறார்.
அதன் தொடர்ச்சியாக, எந்தவொரு தனிமனிதரை விடவும் இயக்கம் பெரிது என்னும் புரிதலிலிருந்து எழுதப்பட்ட எனது கருத்துக்களை, ‘‘மணியம்மையாரின் குணாதிசயத்தையும், மேன்மையையும், ஒழுக்கத்தையும் கேள்விக்குட்படுத்தி அசிங்கப் படுத்துவது தேவையற்றது'' என தோழர் முழுமதி விமர்சிக்கிறார்.
ஆனால், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானதாகத் திராவிடர் கழகம் தடம் மாறியதையும், சமூகப் பணிகளுக்காக பெரியாரால் திரட்டப்பட்ட சொத்துக்கள் சுயநல வெறியர்களின் கைகளில் சிக்கி, ஆடம்பரங்களாக அணிவகுப்பதையும் நடுநிலையோடு திறனாய்வு செய்யும் எவரும், மணியம்மையைக் கேள்விக்குட்படுத்துவதைத் தவிர்க்க முடியாது.
இங்கே, பெண்ணா? ஆணா? என்பது முக்கியமல்ல ; பொதுநலனா? தன்னலனா? என்பதே முக்கியமாகும். மட்டுமின்றி, மணியம்மை ஒரு இளம்பெண் என்பதால் அவரது சுயஉணர்வுகளின் அடிப்படையில் விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதானது, அனுதாபத்தைக் கோரும் பெண்ணடிமைத் தனப்பண்புக் கூறேயாகும்.
ஆகவே, கட்டுப்பாடற்ற பாலுறவு உரிமைதான் பெண் விடுதலை என கருதிக்கொண்டு, பெண் உடல் மொழி என்னும் ஆபாசங்களைக் கவிதைகளாக எழுதிவரும் நவீன பெண் கவிஞர்கள் சிலரைப் போன்று, பெண்ணியத்தைச் சுருக்கிப் பார்க்கவும் கொச்சைப்படுத்தவும் முடியாது. ஏனெனில், ‘‘கண்டதே காட்சி கொண்டதே கோலம் எனும் பொறுப்பற்ற வாழ்முறை கொண்ட ஆண்களை'' எதிர்த்துப் போராடி, அவ்வாழ் முறையை மாற்றுவதுதான் பெண்ணியக் கருத்தியலே தவிர, அதே சீரழிந்த வாழ்முறையில் பெண்களையும் விழச் செய்வதல்ல.
ஒரு பெண்ணின் பாலியல் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்னும் கருத்தின் அடிப்படையில், மணியம்மையின் பாலுணர்வுக்கு மதிப்பளித்தாக வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேவேளையில், ஒரு மக்கள் தலைவரின் மனைவியாக அறியப்பட்டவர் மணியம்மை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதனால், பெண்ணியத்தைக் கவுரவப்படுத்துகிற முறையிலும், பெண்விடுதலையை முன்நகர்த்தும் வகையிலும் மணியம்மை போன்றவர்களின் பாலுணர்வு செயற்பாடுகள் அமையவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லை. ஏனெனில், சமூகத்திற்கு முன்னுதாரணமாக வாழ முன்வந்தவர்கள், கள்ளத் தனத்தைக் கடைப்பிடிக்கக் கூடாது.
ஆகவே, மணியம்மை, தனது இயற்கையான பாலியல் உணர்வுக்காக, கண்ணியமான-நேர்மையான வழிகளைக் கண்டிருக்க வேண்டும். அதற்கு, தமிழ்ச் சமூகத்தின் இணையற்ற பெண்விடுதலைப் போராளியான பெரியார் அனுமதி வழங்கியிருப்பார் என்பதை மறுக்க முடியாது. ஆனால், பெரியாருக்குப் பிறகு, தனது தலைமைக்கான முன்னுரிமைக்கான எவ்வித பாதிப்பும் நேர்ந்துவிடக் கூடாது என்பதே மணியம்மையின் பிரதான திட்டமாக இருந்தது.
அதன் பொருட்டு, அரசியலிலும் தனிவாழ்க்கையிலும் தனது பொருந்தா செயற் பாடுகளை எதிர்த்தவர்களையும், தான் தலைமை ஏற்பதற்குத் தடையாக இருப்பார்கள் எனக் கருதியவர்களையும் திட்டமிட்டு தி.க.விலிருந்து நீக்கியது மட்டுமின்றி, அந்த முன்னுரிமையை இழக்காத வகையில் எச்சரிக்கையாக நடந்து கொண்டார், மணியம்மை. எனவே, மணியம்மையின் பாலியல் உணர்வு பற்றிப் பேசுமபோது, அவரது அரசியல் லட்சியத்தையும் இணைத்தே பார்க்க வேண்டும். அப்போதுதான் அவரது உணர்வுகளை அவரே கேவலப்படுத்திக் கொண்ட உண்மையைப் புரிந்துகொள்ள முடியும்.
தோழர் வே.ஆனைமுத்துவின் நூல் குறித்து, ‘‘இவ்வாறெல்லாம் செய்திகளை இறைத்து நூல் ஒன்றை உருவாக்கி இருப்பது, புதியதோர் அமைப்பினைத் தொடங்குவதற்கும், அதற்கு வலு சேர்ப்பதற்கும் மிகவும் தேவையான ஒன்று என ஆனைமுத்து அவர்கள் கருதி இருக்கக் கூடும்'' என்கிறார், தோழர் முழுமதி. ஆனால், உண்மை வேறுவிதமாக இருக்கிறது.
16-11-1975ல் தி.க.விலிருந்து நீக்கப்பட்ட வே.ஆனைமுத்து, 8-8-1976ல் உருவாக்கிய பெரியார் சமஉரிமைக்கழகம் என்பதே, காலப்போக்கில் மார்க்சிய பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியாகப் பரிணமித்தது. அதன் பிறகே, ‘பெரியார் கொள்கைக்குக் குழிதோண்டிய திராவிடர் கழகம்' நூல் 1997ல் அதாவது, தனிக்கட்சி தொடங்கப்பட்டு ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்குப் பின்பே வெளியிடப்பட்டது.
எனவே, அந்நூல் வெளியிடப்பட்டதன் நோக்கம், ‘‘புதியதோர் அமைப்பினைத் தொடங்குவதற்கும், அதற்கு வலு சேர்ப்பதற்கும்'' அல்ல என்பதும், மாறாக, மணியம்மை மற்றும் வீரமணியின் பெரியாரிய எதிர் அரசியலைப் புதிய தலைமுறைக்குச் சொல்லி விழிப் புணர்வூட்ட வேண்டும் என்பதேயாகும் எனவும் தெளிவாகிறது.
எனவே, தோழர் வே.ஆனைமுத்துவின் நூலில் உள்ள கருத்துக்கள், தோழர் முழுமதி சொல்வதைப் போன்று ‘‘அய்யா ஆனைமுத்துவின் அக்கால ஊகங்கள்'' அல்ல ; ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் தமிழக வரலாறு என்பதே உண்மையாகும். அதனால்தான், அந்நூலினை, வீரமணி குழுவினரால் இன்றுவரை மறுக்க முடியவில்லை.
மேலும், மணியம்மை மீதான எனது விமர்சனங்களுக்கு, தோழர் வே.ஆனைமுத்து மற்றும் தோழர் நாத்திகம் ராமசாமி ஆகியவர்களையே, ‘‘முழுமையாகச் சார்ந்திருக்கிறேன்'' என்பது தோழர் முழுமதியின், ‘‘சோகம்''. அதனால்தான், ‘‘காலச் சூழலுக்கேற்ற கருத்துக்களின் போதாமையினால் தோழருக்கு சறுக்கல் நிகழ்ந்திருக்கிறது'' என்னும் முடிவுக்கு வருகிறார்.
ஆனால், காலத்திற்கேற்றவாறு கருத்துக்கள் மாறலாம் ; கடந்தகால வரலாற்று நிகழ்வுகள் மாறாது என்பதைத் தோழர் முழுமதி உணரவில்லை. மட்டுமின்றி, அவரே, ‘‘இருபெரும் பெரியாரியத் தொண்டர்கள்'' என்று அடைமொழியிடும் இருவரிடமிருந்தும், மணியம்மைக் குறித்த செய்திகளைப் பெறுவதும், நம்பகத் தன்மையுடன் அவைகளைச் சார்ந்திருப்பதும் பொருத்தமானது தானே!
கடந்த ஆண்டு நடைபெற்ற தோழர் நாத்திகம் ராமசாமியின் மகன் திருமண அழைப்பிதழில் அவரது சாதிப்பெயர் அச்சிடப்பட்டிருந்தது என்னும் செய்தியை, இப்போதுதான் தோழர் முழுமதியின் வழி அறிகிறேன். அது உண்மையாக இருக்குமேயானால், அச்செயல் விமர்சிக்கத்தக்கதே! ஆனால், அதற்காக, தோழர் நாத்திகம் ராமசாமி பதிவு செய்யும் மணியம்மை மற்றும் வீரமணி குறித்த நினைவுக் குறிப்புகளையும், பெரியார் வரலாற்றினையும், பெரியாரியக் கருத்துக்களையும் புறக்கணித்து விட முடியாது. தோழர் முழுமதி சொல்வதைப் போன்று, ‘‘எப்போதுமே நாம் முழுமையான மனிதர்கள்'' என்கிற கனவுலகு எதிர்பார்ப்புகளைச் சுமந்தது கிடையாது''.
இறுதியாக, பெரியாரியப் பெண்ணியப் பார்வை என்பது, பெண்களின் அகஉணர்வுகளுக்கு அங்கீகாரம் அளிப்பது மட்டுமல்ல; அனைத்து அடிமைச் சிந்தனைகள் மற்றும் ஆதிக்க அடக்குமுறைகள் ஆகியவைகளிலிருந்து விடுதலைப்படுத்துவது மாகும். மட்டுமின்றி, பெண்களின் முன்னுள்ள சமூகக் கடமை களையும், அவைகளை நிறைவேற்றுவதற்கான பல்வேறு தியாகங்களையும் அறிவுறுத்துவதுமாகும்.
எனவே, மக்கள் விடுதலைக்கான போராட்டக் களத்தில், உயிர், உடலுறுப்புகள், உடைமைகள், வாழ்க்கை, உறவுகள் ஆகியவற்றைத் தியாகம் செய்வதைப் போன்றே, பாலுணர்வை புறந்தள்ளிவிட்டு பயணப்பட்ட எண்ணிறைந்த பெண்களும் ஆண்களும் நேற்றும் இருந்தனர் ; நாளையும் இருப்பர்.
இந்நிலையில், பாலுணர்வின் அடிப்படையில் பெண்களின் மீது பரிவு காட்டப்பட வேண்டும் என்று சொல்வது, பெண்கள் பலவீனமானவர்கள் என்று கருதி, பெண்களை இழிவு படுத்துவதாகும் ; பெரியாரியத்திற்கு எதிரானதாகும் ; பெண் விடுதலை உள்ளிட்ட மானுட விடுதலைக்காகப் போராடும் பெண் போராளிகளைக் கொச்சைப்படுத்துவதாகும்.
சுருக்கமாக, மனித இனத்தில் பாலுறவு தவிர்க்க முடியாதது என்பதைப் போலவே, அதற்கான கட்டுப்பாடுகளும் சமூக ஒழுங்குகளும் அவசியமாகும். இது, மணியம்மை உள்ளிட்ட அனைத்து பெண்களுக்கும் ஆண்களுக்கும் பொருந்தக் கூடியதே!
நன்றி* புதிய பெண்ணியம் பிப்பிரவரி 2008
No comments:
Post a Comment