ஜெயலலிதா நீண்டகாலம் ஆள்வதற்கு ஜோதிட ஆலோசனைகள் தந்து பரிகாரம் செய்ய வைத்தவர் கேரள ஜோதிடர் உன்னிகிருஷ்ண பணிக்கர். கண்ணகி சிலை இடிப்பு, பழனி முருகன் சிலை மாற்றம், முதுமலை யானைகள் முகாம் முதலியவை பணிக்கர் மூலம் நடந்த கைங்கரியங்கள் என்று கூறப்படுகின்றது. நாடறிந்த ஒரு ஊழல் தலைவியின் ஆட்சியை நீட்டிப்பதற்கு "மந்திர' ஆலோசனை வழங்கிய பணிக்கரின் யோக்கியதை எத்தகையதாக இருக்கும் என்பதை வாசகர்கள் அதிக விளக்கமின்றியே புரிந்து கொள்ளலாம். அப்பேற்பட்ட பணிக்கர் சபரிமலை குறித்து ஒரு பிரச்சினையை எழுப்பியிருக்கிறார்.
சாதாரண மக்கள் தமது வாழ்க்கைப் பிரச்சினைக்கு ஜாதகப்பலன் பார்த்து பரிகாரம் செய்வது போல கடவுளுக்கு பார்ப்பதை கேரளத்தில் தேவப்பிரஸ்னம் என்கிறார்கள். அப்படி பணிக்கர் தலைமையிலான ஜோதிடர்கள் சபரிமலை ஐயப்பனுக்கு தேவப்பிரஸ்னம் பார்த்தபோது ஐயப்பன் கோபமாக இருப்பது தெரிந்ததாம். அந்தக் கோபத்திற்கு முக்கியக் காரணம் ஐயப்பனை யாரோ ஒரு ஸ்தீரி ஸ்பரிசத்துவிட்டது தானாம். உடனே நடிகைகள் ஜெயமாலாவும், சுதாசந்திரனும் பல ஆண்டுகளுக்கு முன்னர் தாங்கள் ஐயப்பனைத் தொட்டதாகத் தாமே முன்வந்து ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கோரினர். ""என்னை காங்கிரசு தலைவர்கள் பலவிதமாகப் பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி விட்டார்கள்'' என்று அறிக்கை விட்ட நடிகை மாயா, சத்தியமூர்த்தி பவனையே சந்திக்கு இழுத்ததைப் போல இவர்கள் ஐயப்பனின் "பிரம்மசர்யத்தையே' கேலிக்குள்ளாக்கி விட்டனர்.
""இது சபரிமலையின் புகழைக் கெடுக்க பணிக்கர் செய்யும் சதி'' என சபரிமலை பூசாரிகளும், சபரிமலையின் பாரம்பரியம் கெட்டுப் போய்விட்டதாக எதிர் கோஷ்டியினரும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொள்கின்றனர். நடிகைகள் தொடும்போது அதைக் கள்ளத்தனமாக அனுபவித்த ஐயப்பனோ குத்துக்காலிட்டபடி தேமே என்று அமர்ந்திருக்கிறார். உண்மையில் இந்தப் பிரச்சினை சபரிமலையின் வருமானத்தை அனுபவிக்கும் இரு கோஷ்டிகளுக்கிடையிலான மோதலில் அடங்கியிருக்கிறது. சபரிமலையின் ஆண்டு வருமானம் 200 கோடி ரூபாய். இந்த வருமானத்தை அரசு, அதிகார வர்க்கம், திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு, மற்றும் பூசாரிகள் ஆகியோர் ஆடம்பரமாக அனுபவிக்கின்றனர். இந்தப் பங்குச் சண்டைதான் ஐயப்பன் கோபம் என்றும் சதி என்றும் எழுந்திருக்கிறது.
இந்தப் பங்காளிச் சண்டையில் பெண்கள் இழிவுபடுத்தப்படுவதுதான் கண்டனத்திற்குரியது. ஒரு கோவிலுக்கு பெண்கள் வரக்கூடாது என்றும் வந்தால் தீட்டு, பாவம் என்றும் ஒரு மதம் சொல்லுகிறது என்றால் அந்த மதம் நிச்சயமாக காட்டுமிராண்டிகள் மதமாகத்தான் இருக்க முடியும். பக்தர்கள் குறிப்பாக பெண் பக்தர்கள் இதற்கெதிராக போர்ப் பிரகடனம் செய்து போராடுவது அவசியம். அல்லது ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த ஐயப்பனை ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள் மட்டும் தரிசிக்கலாம் என்றாவது மாற்றியமைக்க வேண்டும். விரதம் என்ற பெயரில் பெண்களை இழிவுபடுத்தி, அதையே ஆண்மையின் வீரசாகசமாகச் சித்தரித்துக் கொண்ட இந்த வெட்கம் கெட்ட வழிபாட்டு முறை பெண்கள் மூலமே "கவித்துவ நீதி'யை சந்தித்திருக்கிறது. இனியாவது பக்தர்கள் சிந்திக்கட்டும்.
இந்தப் பிரச்சினையில் கேரளாவை ஆளும் மார்க்சிஸ்டுகள் ""சாமியே ஐயப்பா முற்போக்கு பொய்யப்பா'' என்று சரணம் பாடுகிறார்கள். தீட்டுப்பட்ட ஐயப்பனுக்கு இரண்டு மாதம் பரிகாரச் சடங்கு செய்து கோபத்தைத் தணிப்பதாகவும், ஜெயமாலா தொட்டது குறித்து தீவிர விசாரணை நடத்தப் போவதாகவும் மார்க்சிஸ்டு மந்திரிகள் அறிக்கை விடுகிறார்கள். ""வருமானத்தைக் குலைக்க சதி'' என்று பதறுகிறார்கள். உண்டியலைக் குறி வைத்து சதி செய்தது ஏழுமலையானாகவோ, பழனி ஆண்டவனாகவோ இருக்கும் பட்சத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவைப்படும். ஐ.எஸ்.ஐ சதி என்றால் இன்டர்போலை அழைக்க வேண்டியிருக்கும்.
ஜெயமாலா கதை, ஏட்டு முதல் எஸ்.பி. வரை ஜெயலட்சுமி கதை போல நீள்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அல்லது தேசநலன் மற்றும் தெய்வ நலன் கருதி இந்த தேவரகசியம் கமுக்கமாக அமுக்கப்படவும் வாய்ப்புண்டு. எவ்வாறாயினும், ஆன் மீக மோசடிகளை அம்பலப்படுத்துவதில் ஆத்திகர்களுக்கு உள்ள திறமை நாத்திகர்களுக்கு இல்லை என்ற உண்மையை நாம் ஒப்புக் கொண்டுதான் ஆகவேண்டும்.
நன்றி* புதிய கலாச்சாரம்
No comments:
Post a Comment