Thursday, February 18, 2016

பெண்களை மறுக்கும் ஐயப்பா, உன் யோக்கியதை என்னப்பா --- செ.கார்கி


 எல்லா மதங்களும் மக்களுக்கு உண்மையையும், நேர்மையையுமே போதிப்பதாகவும் அவை சகோதரத்துவத்தை வலியுறுத்துவதாகவும் ஆனால் மனிதர்கள் தான் தங்களுக்குள் சாதி,வர்க்க, பாலின பேதங்களை உருவாக்கிக் கொள்வதாகவும் கூசாமல் புளுகும் முட்டாள் மதவாதிகளை அம்பலப்படுத்தி இருக்கின்றது சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை விடமறுக்கும் திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு மற்றும் கேரள அரசின் நடவடிக்கைகள்.
sabarimala accommodation ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கவேண்டும் என்று இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பு மற்றும் சில வழக்கறிஞர்கள்  உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்குத் தொடர்பாக பதிலளிக்கச்சொல்லி கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்திரவிட்டது. மேற்படி உச்சநீதிமன்ற கேள்விக்குப் பதிலளித்த கேரள காங்கிரசு அரசு, திருவாங்கூர்- கொச்சி இந்து சமய அமைப்புகள் சட்டம் 1950- படி ஐயப்பன் கோயில் நிர்வாகத்தை திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு கவனித்து வருகின்றது அதன் சட்டத்தின்படி ஐயப்பன் கோவிலின் வழிபாட்டு முறைகள் பின்பற்றப்பட்டு வருவதாகவும் கோயிலுக்குள் யாரை அனுமதிக்க வேண்டும் என்பது குறித்து வாரியமே முடிவு எடுக்கும் என்றும், மத நம்பிக்கை தொடர்பான விவகாரத்தில் மதகுருக்களின் முடிவே இறுதியானது என்றும் கூறியிருக்கின்றது.
 இந்துமதம் என்று அழைக்கப்படும் பிராமண மதம் என்பது பெண்களுக்கு மட்டும் அல்லாமல் அனைத்து மக்களுக்கும் எதிரான மதம் என்பது இதன் மூலம் நிருபணமாகி இருக்கின்றது. இதில் அரசின் பாத்திரம் என்பது மக்களின் முட்டாள் தனங்களைச் சட்டரீதியாகவும், சாஸ்திரங்களின் ரீதியாகவும் பாதுகாத்துத் தன்னை எப்போதும் தக்கவைத்துக் கொள்வதாகும். பி.ஜே.பியைப்பார்த்து  மதவாதக்கட்சி என்று சொல்லும் காங்கிரசின் உண்மையான யோக்கியதையை நீங்கள் இந்தப் பிரச்சினையில் இருந்து தெரிந்துகொள்ளலாம். இந்தப்பிரச்சினையில் கேரள கம்யூனிஸ்டு கட்சி மட்டும் விதிவிலக்கு அல்ல. கேரளாவை மாறி மாறி ஆட்சி செய்யும் காங்கிரசு மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டும் சேர்ந்தே மகரஜோதி மோசடியில் ஈடுபட்டது நமக்கு நினைவிருக்கலாம்.
 தங்களை பதவியில் தக்கவைத்துக் கொள்வதற்காக எந்தமாதிரியான கீழ்த்தரமான செயல்களிலும் இந்தக்கட்சிகள் ஈடுபடும். ஆனாலும் தங்களை எப்போதும் முற்போக்குவாதிகள் போல காட்டிக்கொள்ளும். பி.ஜே.பியின் பார்ப்பன பாசிச இந்துமதவெறிக்கு எந்தவகையிலும் குறைவில்லாதது காங்கிரசின் மதவெறியும், மதவெறியர்களை நக்கிப்பிழைக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் இழிநிலையும். பல நூற்றாண்டுகளாக சாஸ்திரங்களின் பெயரால் இந்தியப் பெண்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் இந்திய ஆணாதிக்க சமூகத்தின் பிரதிநிதிகளாகவே அனைத்து அரசியல் கட்சிகளும் உள்ளன. பெண்களின் உரிமைக்காக குரல்கொடுப்பதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் பேசினாலும் அதன் முதன்மையான நோக்கம் தேர்தலில் வெற்றிபெருவதே ஆகும். அதற்காக  பெண்களின் உரிமைகளை அல்ல வேறு எதை வேண்டும் என்றாலும் அவர்கள் விட்டுக்கொடுப்பார்கள்.
  பெண்களின் மாதவிடாய் என்றால் எப்போதுமே இந்துமத கடவுள்களுக்கு அருவருப்பாகத்தான் தெரிகின்றது. அதிலும் குறிப்பாக ஹோமோ செக்சில் பிறந்த ஐயப்பனுக்கு பெண்கள் என்றால் பயங்கர அலர்ஜி. 10 வயதிற்கு மேற்பட்ட 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் உள்ளே போனால் ஐயப்பன் தீட்டாகி செத்துவிடுவான். இந்துமத ஆண்கடவுள்களின் யோக்கியதைக்கு இந்த ஐயப்பன் பிறப்பு கதையே நல்ல சான்று. எந்த சிவன் தன் உடலில் பாதியைத் தன் மனைவிக்கு கொடுத்து ஆணும் பெண்ணும் சமம் என்று உலகத்திற்கே சொன்னதாக  கதையளந்தார்களோ அதே சிவன் தான் விஷ்ணு என்ற இன்னொரு ஆண்கடவுளிடம் ஹோமோ செக்சில் ஈடுபட்டு  ஐயப்பனை உருவாக்கியதாக புராணங்கள் கூறுகின்றன. இந்த லட்சணத்தில் ஏற்கெனவே சிவனுக்கு இரண்டு மனைவிகள். இப்படி இந்துமத ஆண்கடவுள்கள் பாலியல் வக்கிரம்பிடித்த பொருக்கிகளாக ஊர்மேய்ந்துகொண்டு இருப்பதை அங்கீகரிக்கும் மதவெறியர்கள் பெண்கள் கோயிலுக்குள் வருவதற்கே எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள்.
   மதங்கள்  சகோதரத்துவத்தை வளர்க்கின்றன என்கின்றார்கள். ஆனால் தன்னுடைய சொந்த அம்மா, அக்கா, தங்கைகளின் மாதவிடாயைக் காரணம் காட்டி அவர்களைக் கோயிலுக்குள் விடமாட்டேன் என்று சொல்லி கொச்சைப்படுத்தும் இந்துமத கடவுள்களை வெட்கமே இல்லாமல் ஆண்கள் கும்பிடுகின்றார்கள். இந்துமதம் அனைத்துசாதி பெண்களையுமே தீண்டத்தகாதவர்களாக கருதுகின்றது. ஆனால் பல கோடிக்கணக்கான ஆண்கள் தங்களுடைய அம்மா, அக்கா, தங்கைகளைப் பற்றி இந்துமதப் புராணங்களும், இதிகாசங்களும் மிகக்கேவலமாக பேசினாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் மானங்கெட்டுப்போய்  அந்த கடவுளுக்கு மாலைபோட்டுக்கொண்டு பயபக்தியோடு செல்கின்றார்கள். இதுபோன்ற தன்மானமற்ற உலுத்துப்போன ஆண்கள் தான் இந்துமத காவிப்படையின் அடியாளாகவும் செயல்படுகின்றனர்.
 இதிலே என்ன கொடுமை என்றால் அங்கே இருப்பது ஐயப்பனே கிடையாது என்று அடித்துச் சொல்கின்றார் ‘இந்துமதம் எங்கே போகின்றது’ என்ற புகழ்பெற்ற நூலை எழுதிய அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சரியார். அங்கே இருப்பது அந்த மண்ணின் மைந்தர்களான பழங்குடி இன மக்கள் வணங்கிய அய்யனார் என்று ஆதாரப்பூர்வமாக சொல்கின்றார். அந்த மக்கள் தாங்கள் வேட்டையாடி வந்த மிருகங்களைப் படையலாக வைத்து தங்கள் தெய்வமான அய்யனாரை வணங்கியிருக்கின்றனர். பின்னாளின் ஆந்திராவில் இருந்து அந்தப்பகுதிக்குப் பஞ்சம் பிழைக்கவந்த பார்ப்பன கூட்டம் அந்தக்கோயிலை ஆக்கிரமித்துக்கொண்டு அந்த மக்களை ஏமாற்றி அந்தக்கோயிலை கையகப்படுத்தி இருக்கின்றது. பின்பு தனது வழக்கமான தொழிலான புரட்டு தொழில்மூலம் அய்யனாரை ஐயப்பன் ஆக்கி தங்கள் வசப்படுத்திக்கொண்டார்கள். பின்னர் அந்த மக்கள் தங்களின் வனத்தில் தீப்பந்தம் ஏந்திக் கொண்டாடும்  திருவிழாவையும் தங்கள் வசப்படுத்திக்கொண்ட பார்ப்பன பொய்யர்கள் அந்தமக்களை எளிய வழிபாட்டு முறையை மாற்றி தாங்கள் கொள்ளையடிக்கும் ஆடம்பர வழிபாட்டு முறையாக மாற்றினார்கள். (இந்துமதம் எங்கே போகின்றது நூல்பக்கம் 286-296 ).
  இப்படி மக்களின் முட்டாள் தனத்தைப் பயன்படுத்தி அதை தனக்கான வருமானமாகவும், சமூகத்தில் தனக்கான தனி அங்கீகாரமாகவும் மாற்றிவைத்திருக்கும் பார்ப்பன கூட்டத்திற்கு எதிராக ஒவ்வொரு சுயமரியாதை உள்ள மனிதனும் போராடவேண்டிய உள்ளது. சபரிமலையில் பெண்களை அனுமதிக்க மறுக்கும் அதே பார்ப்பன ரவுடி கூட்டம்தான் மராட்டிய மாநிலம் அகமத்நகர் மாவட்டத்தில் உள்ள சனி பகவான் கோவிலுக்குள் பெண்கள் செல்லவும் தடைவிதித்து இருக்கின்றது. இதற்கு எதிராக பூமாதா என்ற பெண்கள் அமைப்பினர் போராடி வருகின்றனர்.
 இன்னும் எத்தனை நூற்றாண்டு ஆனாலும் வழிபாட்டு உரிமையும், சமூக அங்கீகாரமும் தங்களைப்பொருத்தே இருக்கவேண்டும் என்று வெறிகொண்டு அலையும்  இந்த பார்ப்பன கூட்டம் தன்னையே எப்போதுமே இந்துமதத்தின் தலைமையாக கருதிக்கொள்கின்றது. இந்தப் பார்ப்பன ஓநாய்களை யார் இந்துமத்த்தின் தலைவர்களாக தேர்ந்தெடுத்தார்கள் என்றுதான் இன்றுவரை தெரியவில்லை. இவர்களாகவே வெட்கம்கெட்டுப்போய் அப்படி சொல்லிக்கொள்கின்றார்கள். அதை வைத்துக்கொண்டு அனைவரையும் மேலாதிக்கம் செய்கின்றார்கள். பல மானங்கெட்ட மேல்சாதியினரரும் தங்களுடைய சமூக இருப்புக் கருதி அதை உச்சிமோந்து ஆதரிக்கின்றார்கள்.
  பெரும்பாண்மையான உழைக்கும் மக்களாகிய நம்மை எல்லாம் வேசிமக்கள் என்று சொல்லும் பார்ப்பன கோயிலுக்குள் நுழைவதற்காக போராடுவதா இல்லை அதை முற்றிலும் புறக்கணித்து நம்முடைய சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொள்வதா என்பதே நம்முன்னால் உள்ள கேள்வி. என்னைக்கேட்டால் புறக்கணிப்பதே சிறந்தது என்று சொல்வேன். நம்மை மதிக்காத கடவுளும், நம்மை அவமானப்படுத்தும் சாஸ்திரங்களும் அதை தாங்கிப்பிடிக்கும் மதமும் நம்முடைய மறைவான இடத்தில் இருக்கும் மயிருக்குச் சமமில்லையா?
- செ.கார்கி

http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/30248-2016-02-15-07-53-18?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+keetru%2FmAfm+%28Keetru+RSS+Feed%29

Wednesday, January 6, 2016

ஆதிக்கத்திற்கு எதிரான சொற்கள் - அதங்கோடு அனிஷ்குமார்

           தொழில்நுட்ப யுகத்திலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்வது வருத்தம் தருகிறது. பெண்களை ஆணாதிக்க சிந்தனைகளுக்கு ஏற்ப வார்த்தெடுப்பதிலே சமுதாயம் மிகவும் தீவிரம் காட்டி வருகிறது. அவர்கள் அடிமைகளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் கூட அறியாத வண்ணம் மதங்களாலும் மதம் சார்ந்த சடங்குகளாலும் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். எப்பொழுது ஒருவர் தான் அடிமையாக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்கிறாரோ அப்போதே அடிமை நிலையை கடக்கிறார் என மார்கிரட் ஆட்வுட் எனும் கவிஞர் கூறுவது குறிப்பிடத்தக்கது. பெண்கள் தங்கள் அடிமை நிலையை உணரும் வரை அவர்களுக்கெதிரான வன்முறைகள் ஏறுமுகமாகத்தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

    பெண்களுக்கெதிரான வன்முறைகள் ஊடகங்களின் தீவிர தேடுதலில் அதிக அளவில் வெளிச்சத்திற்கு வந்திருந்தாலும் பெண்கள் வருணனைகளாலும், கிண்டல், கேலி பாலியல் முதலியவற்றால்  உளவியல் ரீதியாகவும், உடலியல் ரீதியாகவும் வன்முறைக்குட்படுத்தப்படுவது நாம் அறியாததல்ல. இதைவிட கொடூரம் பெண்களுக்கெதிரான நடவடிக்கைகளை கலாச்சாரப் போர்வை போர்த்தி பாதுகாக்கும் நம் பண்பாட்டு காவலர்களில் கருத்தியல் நிலைபாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    கண்காணிப்பின் அரசியலை தொடர்ந்து நிகழ்த்தும் ஆதிக்க சத்திகள் பெண்ணுடலை ஆண்களுக்கான உடலாக வார்த்தெடுப்பதில் ஏன் அதிக கவனம் காட்டுகின்றன? பெண்கள் மேல் மட்டும் ஏன் இவ்வளவு சடங்குகள் திணிக்கப்படுகின்றன? என்பன போன்ற அதிகாரத்திற்கெதிரான கேள்விகள் எழும்போதெல்லாம் ‘ஒழுக்க சீலர்கள்?’ ‘அபச்சாரம்’ என கத்துகிறார்கள். ஒழுக்கத்தை பொதுவில் வைக்கவேண்டும் என கூறினால் உடனே மறுப்புரை எழுத கிளம்புகிறார்கள் தமிழ் அறிவு ஜீவிகள். ஆனால் பெண் விடுதலையை முன்னெடுத்த பெரியாரையும், பாரதியையும், பாரதிதாசனையும் உலகப் பெண்கள் தினத்தன்று இவர்கள் நினைவுப்படுத்தி முழங்குவது நகைப்பிற்குரிய முரண்.

    பெண்கள் மேல் வீசப்பட்ட தளைகள் உடைபடும் காலத்தில் பெண்ணடிமை தீர்ந்துவிட்டது. ஆண் அடிமையாகிவிட்டான் என்ற குரலும் மெல்ல தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது. பெண்ணடிமைத்தனத்தை போதிக்கும் மதங்கள் மேல் கேள்வி எழுப்பப்படுமானால் உடனே பீடங்கள் பிதற்றுகின்றன. ஆன்மீகவாதிகள் மதத்தின் கொடுவாள் எடுத்து வீசுகிறார்கள். (ஆன்மீகம் போதித்து திரியும் சாமியார்களின் கதைகள் நாம் அறியாததல்ல) இனியும் எத்தனை நூற்றாண்டுகளானாலும் மதங்களை பரப்பித்திரியும் சாமியார்களை பின்தொடர்பவர்களால் பெண்களை உணர்ந்து கொள்ள முடியாது. ஏனெனில் மதங்களும் புராணங்களும் பெண்களை கருவறைகளுக்கு வெளியே கையேந்தி நிற்க வைப்பதிலேயே கவனமாக நிற்கின்றன.

    எதன் பொருட்டு பெண்கள் பொருளாக்கப்பட்டார்கள்? இன்னும் இன்றும் பெண்ணுடல் காட்சிப் பொருளானது ஏன்? நம் சகோதரிகளுக்;கு பூப்பு நீராட்டின் போது செய்யப்படும் சடங்குகளின் பொருள் என்ன? சடங்குகள் பாரம்பரியம் எனில் யாருக்கானவை? இப்படி எழும் கேள்விகளுக்கான விடைகளை முன் வைக்கும் கட்டுரைகளை பூப்பு நீராட்டு தேவையா? எனும் தலைப்பில் தொகுத்து வெளியிட்டிருக்கிறார் நாளை விடியும் இதழாசிரியர், பெண்ணிய செயல்பாட்டாளர் பி.இர.அரசெழிலன். இந்த நூல் மீது மதிப்புரை எழுதப்போய் அது திறனாய்வாக விரிந்ததால் முங்காரி (ஆகஸ்ட் 2011) இதழ் திறனாய்வு சிறப்பிதழாக மலர்ந்ததாக சொல்கிறார் இதழின் ஆசிரியரும் தமிழ் சிற்றதழ் சங்க தலைவருமான குன்றம்.மு.இராமரத்நம். அவர் எழுத நினைத்த மதிப்புரை மறுப்புரை மாண்பற்ற வெறுப்புரையாக மலர்ந்திருக்கிறது என்பதுதான் உண்மை. அவரின் கருத்துக்களை - அபிப்ராய குறிப்புகளை திறனாய்வு என கொள்ள முடியாது. நூலின் கருத்துக்களை நேர்மைத் திறத்தோடு ஆராயாமல் நூலிலிருந்து சில கருத்துக்களை மட்டும் பெயர்த்தெடுத்து நையாண்டி செய்வதை எப்படி திறனாய்வு எனக் கொள்ள முடியும்? மேலும் நூலின் கருத்துக்களை பல்லவி, அனுபல்லவி என கிண்டலடிப்பதன் மூலம் அவரது திறனாய்வு(?) எத்திசை நோக்கி நகர இருக்கிறது என்பதை நம்மால் எளிதில் நினைத்துப்பார்க்க முடிகிறது. தான் வாதாடுவதற்கு ஏதுவாக நூலின் சில வரிகளை புகார்களாக மாற்றுகிறார். அந்த புகார்களை தன் ஆளுகைக்குட்பட்ட நீதிமன்றத்தில் தானே வழக்கறிஞராகவும் நீதிபதியாகவும் இருந்து தீர்ப்பும் எழுதுகிறார் என எண்ணத் தோன்றுகிறது. புகார், குற்றப்பத்திரிக்கை முதலான சொல்லாடல்கள்தான் நம்மை இப்படி சிந்திக்க வைக்கிறது.


    ‘பூப்பு நீராட்டு தேவையா?’ என்னும் கேள்விக்கு பெரும்பாலான கட்டுரையாளர்கள் முன் வைக்கும் ‘பூப்பெய்துதல், ஒரு இயற்கையான நிகழ்வாக பார்க்கப்பட வேண்டும். இயல்பான உடலியல் மாற்றத்திற்கு மஞ்சள் நீராட்டு தேவையில்லை’ எனும் கருத்தை புகாராக மாற்றி “பூப்படைந்த பெண்ணுக்கு விந்து வர மார்க்கமில்லை” (முங்காரி, பக்கம் 17) எனும் தவறான தகவலை தருவதோடு ரத்தம் தீட்டானது (விலக்கானது) என விளக்கம் நல்கி ‘இதையெல்லாம் வைத்து அரசியல் பண்ணக்கூடாது என தனது எச்சரிக்கையையும் சான்றோர் கருத்து என எடுத்தியம்புகிறார்.

    பூப்பு நீராட்டு விழாவை ஆணாதிக்க அரசியல் செயல்பாடாக கருதுவதில் தவறில்லை. பெண்களுக்கு பூப்பு நீராட்டு நடைபெறுவது போல ஏன் ஆண்களுக்கு விழா எடுக்கப்படுவதில்லை? என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டியிருக்கிறது. இப்போதெல்லாம் பூப்பெய்திய பெண்ணின் படமும் அவரது பெற்றோர் படமும் பலவண்ண விளம்பர தட்டிகளாக வைக்கப்படுவது நாம் அறியாததல்ல. கூடவே ஏதுமறியாத பூப்பெய்திய பெண்ணை (பெண்கள் பூப்பெய்யும் வயதினை நினைவில் கொள்க) சந்தை பொருளாக்கும் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டிய காலத்தில் அதையே ஆதரிப்பது ஆணாதிக்க அரசியல் அல்லாமல் வேறென்ன? அதனால்தான் பூப்போடு தீவிரப்படுத்தப்படுகிறது பெண்ணை அடக்கியாளும் நடவடிக்கை என்கிறார்கள் கட்டுரையாளர்கள். கட்டுரையாளர் மேசா குறிப்பிடுவது போலல்லாமல் ஆண் குழந்தைகள் வளர்கிறார்கள். பெண் குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்கள். ஏனெனில் ஆணுக்கும் பெண்ணுக்குமான மாதிரிகளை சமூக அமைப்பு பெற்றோர்கள் மூலம் திணிக்கிறது. பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படும் விளையாட்டுப் பொருட்கள் ஆண் குழந்தைகளுக்கு வழங்கப்படும் விளையாட்டுப் பொருட்களிலிருந்து வேறுபடுவதை கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. உடை வேறுபாடு பற்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை. எனவே ‘வேறுபடுத்தப்படுதல்’ மூலம் ஓரங்கட்டப்படுதல் நடைபெறுவதை நாம் அறிய முடிகிறது. இப்படி ஓரங்கட்டப்படுதலின் உச்சம் பூப்பெய்தலின் போது நிகழ்கிறது.

    பெண்களின் பாதுகாப்பு குறித்து தீவிர கவலை கொள்ளும் குன்றம் குழந்தை திருமணத்தை ஆதரிக்கிறாரோ? என ஐயம் கொள்ள வைக்கும் வரிகள்; “மகள் பூப்படைந்து காம உணர்வால் வழிதவறி போகாமல் வயதுக்கு வருவது முன்னரே 5, 6 வயதிலேயே திருமணங்கள் நடந்தன. வயதுக்கு வரும் வரை பெண் தாய் வீட்டில் இருக்கும். (பெண் ஒரு பொருள்தான் போலும். அதனால்தான் குன்றம் ‘இருக்கும்’ என்கிறார்) வயதுக்கு வந்து பூப்பு சடங்கு முடிந்தபின் மாப்பிள்ளை வீட்டுக்கு சீதனங்களோடு அனுப்பி வைப்பார்கள். இப்படியான கற்பொழுக்கத்தில் காமம் காதலாகி ஈருடல் ஓர் உயிராய் இல்லறத்தில் இயங்குவார்கள்”. இப்படி காப்பாற்றப்படாத பெண்கள் தவறான வழிகளை தேர்ந்தெடுப்பார்கள் என அறிவுறுத்தும் குன்றம் களவு வாழ்க்கை மேற்கொள்ள சங்க காலத்து பருவம் எய்திய கிழவன் - கிழத்திற்கு இருந்த உரிமைகூட நம் கால பெண்களுக்கு இல்லை எனச் சொல்வது போல தொனிப்பதை நாம் காணலாம். மேலும் 5, 6 வயதில் நடந்த திருமணங்களில் குழந்தை கணவன் இறந்து போனால் குழந்தை விதவையின் நிலையென்ன? என்பது குறித்து நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கூடவே பூப்பெய்தியவுடன் பெண்களெல்லாம் வழிதவறி போய்விடுகிறார்களா? எனும் கேள்வியும் நமக்கு எழுகிறது.

    பெண்ணியவாதிகள் கொள்கைப்படி பெண்களை வளர்த்தால் அவர்கள் நெறிகளற்ற பாலியல் வாழ்க்கை தேர்வு செய்வார்கள் என அவரது கவிதை மூலமும் எச்சரிக்கிறார்.

    ஓரினப்புணர்ச்சியை – நான்
    விரும்புவதுமில்லை – அது
    இயற்கையுமில்லை.
    கண்ணசைவுக்கு காளைகள்
    காத்துக்கிடக்கும் போது – அது
    தேவையுமில்லை.

    பெண்ணியவாதிகள் பெண்களை கெடுக்கிறார்கள் என குரலுயர்த்துதல் பெண்களை மீண்டும் சிறையில் அடைக்கும் தந்திரமாகவே தோன்றுகிறது. மேலும் பெண்ணிய செயல்பாட்டாளர்களால் பெண்கள் வழி தவறுகிறார்கள் என்பதற்கு சான்றுகள் ஏதேனும் உண்டா? உண்மை என்னவெனில் பெண்ணிய சிந்தனையாளர்களின் வழிகாட்டுதல் பெண்கள் தங்களை உணர வழிகாட்டும்; பெண்களை போகப்பொருட்களாக நடத்தும் ஆதிக்க சக்திகளை அவர்களுக்கும் அடையாளம் காட்டும்; மேலும் பெண் ஆணைப்போலவே அனைத்து உரிமைகளும் உடைய மானுட பிரவாகத்தின் சரிபாதி எனும் புரிதலை உருவாக்கும். மனைவியை கணவன் அடித்தால் (Phலளiஉயட ஏழைடநnஉந) அதற்கு மனைவியையே காரணமாக காட்டும் மனநிலை மீது கேள்வி கேட்க பெண்ணிய சிந்தனை உதவும் என்பதில் ஐயமில்லை. கணவன் மனைவியை அடித்தல் வீட்டில் மட்டுமல்ல வெளியிலும் நடக்கும் அவலம். குன்றத்தரின் கூற்றுப்படி வன்முறை எதுவாயினும் பெண்களே அதற்கு காரணம் என்பதாகும். பொது இடத்தில் பெண்கள் மீது ஓங்கப்படும் கைகள் ஆதிக்கத்தின் கைகள் அல்லாமல் அரவணைப்பின் கைகளா? மேலும் மனைவியை கெட்ட வார்த்தைகளால் திட்டும் (பொது இடம் உள்பட) கணவனின் உயரும் குரல் ஆண் திமிர் அல்லாமல் வேறென்ன? ஒரு வேளை கணவனுக்கெதிராக ஒரு பெண் குரல் உயர்ந்தால்? அல்லது தன்னை நோக்கி நீளும் கரத்தை ஒரு பெண்கரம் தடுக்க துணிந்தால்? உடனே பெண்கள் கெட்டுப் போய்விட்டார்கள். என்ன இருந்தாலும் கணவனுக்கு எதிராக ஒரு பெண் அதுவும் அவன் மனைவி குரலுயர்த்துவதா? கை ஓங்குவதா? என கேள்விகள் எழுப்பும் குரல்கள் இனி தமிழ்ச் சமுதாயத்திற்கு விடிவே இல்லை என்னும் தங்களின் முடிவை உரத்த குரலில் உலகுக்கு அறிவிக்கக் கூடும்.

    பெண்களுக்கு ஏற்படும் எல்லா தொல்லைகளுக்கும் முக்கிய காரணம் ஆணாதிக்கம் தான் என்னும் உண்மையை ஒரு குற்றப்பத்திரிக்கையாக்கி வாதிடுகிறார் குன்றம். ஆணாதிக்கம் என்ற ஒன்று இல்லை என எடுத்த எடுப்பிலேயே அவதானிக்கும் அவர் பெண்ணாதிக்கமே தொடர்கிறது என்கிறார். பெண்ணாதிக்கம் எனும் தன் கருத்தை வலுப்படுத்த வேலைப்பளுவை பகிர்ந்து கொள்ளும் ஆண்களை பெண்டாட்டிதாசன்கள் என கண்டிக்கவும் செய்கிறார். இது ஏன் என்று சொல்லித் தெரிய வேண்டியது இல்லை? ஆணுக்கு சுதந்திரமான வெளியையும் பெண்ணுக்கு நான்கு சுவர்களுக்கிடையில் வாழ வேண்டிய நிர்பந்தத்தை உருவாக்கிய ஆணாதிக்கத்தின் ஆணிவேர் ஆடுவது கண்டதால் ஏற்பட்ட அச்சமே காரணம். பெண்கள் வேலைக்கு செல்லும் இன்றைய நிலையிலும் பொருளாதார சுதந்திரம் அற்றவர்களாக அவர்கள் வாழ நேரிட்டதற்கு என்ன காரணம்? ஆணாதிக்கம் எல்லா நிலைகளிலும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. கண்ணுக்கு தெரியாத சங்கிலிகளால் பெண்களை பூட்டுகிறது. பெண்கள் இப்படித்தான் வாழவேண்டும் என அவர்களுக்கான நிபந்தனைகளை இறுகப்பிடித்தபடி ஆண்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு உறுதுணையாக கற்பை பெண்களுக்கு மட்டும் வலியுறுத்துகிறார்கள். ஒழுக்கக் கோட்பாட்டை பெண்கள் மேல் மட்டும் திணிக்கும் ஆதிக்க சமுதாயம் ஆண் ஒழுக்க கேட்டுடன் வாழலாம் என அனுமதியும் வழங்குகிறது. ‘கற்பு’ என்பது இன்று ஒழுக்கம் என்ற நிலையில் பார்க்கப்படாமல் உறுப்பு எனும் அளவில் குறுகிப்போனது பற்றியும் சிந்திக்க வேண்டியிருக்கிறது. கற்பை பொதுவில் வைப்பதில் இன்னும் ஏன் தயக்கம்? பெண்கள் பத்தினிப் பெண்களாக இருக்க வேண்டும். ஆண்களின் கட்டளைகளை பணிந்து நிறைவேற்றுபவர்களாக இருக்க வேண்டும். இவரின் மனைவி என்பதே பெருமையாக கருதி பெண்கள் வாழ வேண்டும் எனும் ஆணாதிக்க எதிர்பார்ப்பு இன்னும் வலுவாக தொடரும் நிலையில் ஆணாதிக்கம் என்பது இல்லவே இல்லை எனக்கூறுவது நகைப்பிற்குரியதாகும்.

    ‘பூப்பு நீராட்டு விழா’ உள்ளிட்ட பெண்களை காட்சிப் பொருளாக்கி சந்தை கலாச்சாரத்தை வலுப்படுத்தும் எல்லாவற்றையும் புறக்கணிக்க வேண்டும் என்பதே நம் நிலைப்பாடு. முன் முடிவுகளோடு ஒரு நூலை படிப்பது அந்த நூலைப்பற்றிய தவறான முடிவுக்கு நம்மை இட்டுச் செல்லும் அபாயம் உண்டு. அப்படிப்பட்ட அபாயமே குன்றத்தாரின் விமர்சனத்தில் நடந்திருக்கிறது. இன்னும் தீவிரமாய் பெண்ணிய செயல்பாட்டாளர்கள் செயல்பட வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதையே குன்றத்தாரின்; மறுப்புரைஃவெறுப்புரை காட்டுகிறது. ஆதிக்க சொற்கள் இருக்கும் வரைக்கும் அதற்கான எதிர்ச்சொற்கள் இருந்தே தீரும் எனச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

- அதங்கோடு அனிஷ்குமார்