Thursday, April 2, 2009

எப்படி சூத்திரர் பஞ்சமன் பட்டங்கள் ஒழிய வேண்டுமோ, அதுபோல்தான் திருமதி பட்டமும் ஒழிய வேண்டும்...

கட்டுரை



ஓவியா
என்னதான் செல்வம் சேர்த்தாலும் படித்து முடித்து அய். ஏ. எஸ் ஆனாலும் நீ யார் சூத்திரன்தானே? பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகன்தானே? அப்படித்தானே இந்த நாட்டின் சாத்திரம் சொல்கிறது! அப்படித்தானே இந்த நாட்டின் கோவில்கள் சொல்கின்றன! நீ கட்டிய கோவிலின் கருவறைக்கு வெளியில்தானே நீ நிற்கிறாய்? இந்த மதத்தை அழிக்காமல், இந்தக் கோவில்களை அழிக்காமல் நீ எப்படி இந்த நாட்டின் மானமுள்ள குடிமகனாக உன்னை கருதிக் கொள்ள முடியும்? உன்னை இரண்டாந்தரமாக்கும் எதுவும் உன்னுடையதல்ல. அது உனது தேசமாக இருந்தாலும் சரி, ஏன் மொழியாகவே இருந்தாலும் சரி. உன்னை மானமுள்ள மனிதாக நடத்துவதற்கு தடையாக எது இருந்தாலும் தகர்த்தெறிவதே உனது கடமையாகும். இதுதான் தலைவர் பெரியார் தன் இறுதி மூச்சுள்ள வரையில் தமிழருக்கு தந்து சென்ற செய்தியும் பணியுமாகும். தன்மானம்தான் வாழ்வின் சாரம் என்று சிந்தித்தவர் பெரியார். தன்மானத்துடன் மனிதன் வாழும் வாழ்க்கையும் அதற்கான போராட்டமுமே மனிதர்களை மிகச் சிறந்த பரிணாமத்திற்கு இட்டுச் செல்லும் என்று சிந்தித்தார் பெரியார். அவருடைய மூச்சுக் காற்றும் அவ்விதமே இயங்கியது.

உண்மையில் அனைத்து பேதங்களையும் கருவறுக்கும் அடிப்படைச் சூத்திரத்தை உள்ளடக்கிய வாழ்க்கை வாய்ப்பாடாகும் இத்தத்துவம். தமிழர் விடுதலைக்கு மட்டுமல்ல உலகின் எந்த பிரிவினரின் விடுதலைக்கும் பொருந்துகின்ற தத்துவம்தான் இது. பெண்விடுதலையையும் இதே வாய்ப்பாட்டை பயன்படுத்தியே புரிந்து கொள்ள வேண்டும். படிப்பு வேலைவாய்ப்பு சொத்துரிமை இவையெல்லாம் பெண் விடுதலைச் சமூகத்தைப் படைக்கும் பாதையின் படிக்கட்டுகள்தானே தவிர எல்லைக் கற்களல்ல. இன்று இந்த மண்ணில் பெண்ணின் வாழ்க்கை என்பது என்னவாக இருக்கிறது? பெண்ணைக் கருவிலேயே வெறுக்கும் நிலை இன்னும் தொடர்கிறது என்ற போதிலும் இந்தக் கட்டுரையில் அந்த நிலையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு ‘பெண்ணுக்கு என்ன இல்லை இப்போது?’ என்று நம்மை கேள்வி கேட்கும் சமூகத்தையே நமது களமாக எடுத்துக் கொள்வோம்.

இன்று பெண் குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள். உண்மைதான். வேலைக்கு அனுப்புகிறார்கள். சரி. ஆனால் இந்தக் கல்வி, வேலைவாய்ப்பு இவற்றை பயன்படுத்தி பெண் தன் வாழ்க்கையை தான் வாழ அனுமதிக்கப்படுகிறாளா? திருமணம் வரை தந்தையின் பாதுகாப்பில் அதன்பின் கணவனின் கட்டுப்பாட்டில் இறுதியாக மகனின் தயவில் என்று வாழ்கின்ற விதியை இன்று வரை இந்த சமுதாயம் ஏதாவதொரு வகையிலாவது திருத்தி எழுதியிருக்கிறதா? என்ன படித்திருந்தால் என்ன? சமூகத்தில் என்ன நிலை வந்தால்தான் என்ன? இந்த வாழ்க்கை சட்டகத்திற்குள் என்ன தன்மானம் வாழ்கிறது பெண்ணுக்கு? எப்படி சூத்திரப் பட்டமும் பஞ்சமன் பட்டமும் ஒழியாமல் இந்த நாட்டின் வெகுமக்களுக்கு விடுதலை இல்லை என்று நினைக்கிறோமோ அப்படித்தானே இந்தத் திருமதிகள் பட்டம் ஒழியாமல் பெண்களுக்கு விடுதலை கிடையாது என்பதும்!

‘திருமதி’ பட்டங்கள் ஒழியாமல் ‘தேவடியாள்’ பட்டமும் ‘விதவைப் பட்டமும்’ ஒழியுமா? ஒரு நாளும் அது சாத்தியமில்லை. இந்த வார்த்தைகள் சாகாத வரையில் பெண் வாழ்க்கை என்பது விடுதலை வாழ்க்கையுமில்லை. பெண் விடுதலை என்பது ஒட்டுமொத்த இந்த மானுட வாழ்வின் மறு சீரமைப்புடன் தொடர்புடைய கருத்தியல் என்பதை புரிந்து கொள்ளாத வரையில் பெண் விடுதலை என்பதை ‘பெண் கல்வி’யாகவும் ‘பெண்ணின் வேலை வாய்ப்பாக’வும் ஏன் ‘பெண்ணின் உடை’யாகவும் கூட ஓர் எல்லைக்குள் சுருக்கிதான் பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கும்.

ஏன் கல்வி கற்ற பின்னும் பொருளாதார வாய்ப்பு கிடைத்த பின்னரும் பாதுகாப்புக்கு ஓர் ஆண் துணை வேண்டும் என்று பெண் நினைக்க வேண்டியிருக்கிறது?

ஏன் இன்னும் இந்த மண்ணில் திருமணத்திற்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் சிறிது கூட குறையாமல் இருக்கிறது?

பிறக்கப் போகும் பிள்ளை தனது பெயரைச் சொல்லப் போவதில்லை தனது பெயரை அதன் முதலெழுத்தாய் போடப் போவதில்லை என்று தெரிந்த பின்னரும் எதற்காக உயிரைப் பணயம் வைத்து பெண் பிள்ளை பெறுகிறாள்?

கடைசி காலத்தில் மகன் வீட்டில் ஒரு காவல் நாயைப் போல் வாழும் வாழ்க்கை நிதர்சன உண்மையாகக் கண் முன்னே விரிந்து கிடக்க இன்னும் ஏன் தாய்மை புனிதமானது என்ற பொய்யை அவள் நம்பிக் கொண்டிருக்கிறாள்?

மனிதப் பிறவியாக வாழ்வது என்றால் என்ன என்றே தெரியாத நிலையில் மனைவியாகவும் தாயாகவும் மாமியாராகவும் வாழ்வதிலேயே ஏன் இன்னும் முடங்கிக் கிடக்கிறாள்?

பெண் விடுதலைக்ககாக சிந்திப்பவர்கள் இந்த சவால் மிக்க கேள்விகளை எழுப்ப வேண்டிய காலகட்டத்தில் இன்று இருக்கிறார்கள். இந்தக் கேள்விகளை எழுப்புவது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஏனெனில் நம்முடைய தோழர்களே அதிர்ந்து போவதை நாம் பார்க்கிறோம். இந்த கேள்விகள் பொறுப்பில்லாமல் ஏதோ கையில் கிடைத்த கல்லை எறிவது போன்றது என்றும் அவர்கள் கருதுகிறார்கள். பொதுவாக பெண்ணின் வலி என்பது பெண்களாலேயே புரிந்து கொள்ளப் படாமல் இருக்கும் ஓர் சமூகத்தில் ஆண்கள் அதை புரிந்து கொள்வார்களா? அது சாத்தியமில்லை. மேலும் இந்தக் கேள்விகள் மற்றும் இதற்கான பதில்கள் இன்று சமுகத்தில் நிலவிக் கொண்டிருக்கும் ஓர் அடிப்படை ஒழுங்கை கலைத்து விடுமென்றும் அதற்கான மாற்று என்ன என்பதை ஒரு கறாரான வரைபடம் போல் எழுதிக் காட்ட முடியாத பட்சத்தில் இந்தக் கேள்விகள் தங்களின் தார்மீக அடிப்படையை இழந்து விடுவதாகவும் உணரப்படுகிறது. அவர்களுடைய அந்த சமூக அக்கறை குறித்து நாம் பரிசீலிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

‘பெண்ணின் சுதந்திரம்’ குடும்ப அமைப்பை புறக்கணித்து வாழ அவர்களுக்கு வழங்கப்படும் உரிமை என்பது ‘குழந்தை வளர்ப்பு’ ‘முதியோர் பாதுகாப்பு’ என்பவற்றை கேள்விக்குள்ளாக்கி விடும் என்ற அச்சம் நிலவுகிறது, பெண்ணுக்கு இப்போது புதிதாக அறிமுகமாகியிருக்கும் சுதந்திர வெளியை பயன்படுத்தி அவர்கள் முதலில் எடுத்த நடவடிக்கையே கூட்டு குடும்பத்தை விட்டு வெளியேறி தனிக் குடும்பங்களை நிறுவியதுதான். இன்று தனிக்குடும்ப கலாச்சாரம் என்பது நிலைநிறுத்தப்பட்டு விட்டது. இந்த மாற்றம் என்பது பெரும்பாலும் பெண்கள் தரப்பிலான நடவடிக்கையாக அமைந்திருப்பதும் உண்மைதான். இதனால் பாதிக்கப்பட்டிருப்பது குழந்தைகளும் முதியோர்களும் என்ற விளைவினை இன்று பலரும் முன்னெடுத்து விவாதிக்கிறார்கள். இப்போது புதிய தலைமுறை திரைப்பட இயக்குனர்களின் சிறப்பு கவனத்தையும் இந்த பிரச்சனை பெற்றிருக்கிறது. இதில் இவர்கள் யாரும் பார்க்க மறுக்கிற சில விசயங்களை நாம் முன்வைத்தாக வேண்டியிருக்கிறது.

பெற்றவர்களை வளர்த்தவர்களைப் பிரிவது அவர்கள் தனிமையிலும் இயலாமையிலும் இல்லாமையிலும் வாடும் போது பாராமுகம் காட்டுவது குற்றம் என்ற பொதுப் புத்தியை ஆணுக்கும் பெண்ணுக்கும் நாம் கட்டமைக்க வேண்டியிருக்கும்போது வளர்த்தவர்களை விட்டுப் பிரிந்து போவதுதான் வாழ்க்கை என்ற நியதியை பெண்ணுக்கு மட்டும் ஏன் ஏற்படுத்தியிருக்கிறீர்கள்? தனது தாய் தகப்பனை பிரிய வேண்டியது பெண்ணுக்கு தர்மம். ஆனால் அதே செயற்பாடு ஆணுக்கு மட்டும் அதர்மம் என்ற விதியை எழுதியது யார்? இந்த அடிப்படையான அதர்மத்தை இன்னும் மறைத்துக் கொண்டே கூட்டுக் குடும்பத்தின் பெருமையைப் பேசும் யாருக்கும் ஏன் குற்றவுணர்வு எழுவதில்லை என்பது நமக்கு வியப்பாக இருக்கிறது. கூட்டு வாழ்க்கை என்பது வேறு கூட்டுக் குடும்பம் என்பது வேறு. கூட்டு வாழ்க்கையை நாமும் பேணவே விரும்புகிறோம். ஆனால் ஆணின் தலைமையிலான கூட்டுக் குடும்பம் கூட்டு வாழ்க்கைக்கான அமைப்பே அல்ல என்பதுதான் நாம் வலியுறுத்தும் உண்மையாகும்.

ஒரு தலைமையின் கீழ் உள்ள அடிமைகளின் கட்டமைப்பே குடும்பம், பறவைகளின் சராணாலயமும், மிருகக் காட்சி சாலைகளும் ஒரே அமைப்பல்ல அல்லவா? குடும்பத்தைக் காப்பாற்ற நினைப்பதும் கூட்டு வாழ்க்கையை காப்பாற்ற நினைப்பதும் ஒன்றல்ல என்பதற்கு நிறைய உதராணங்களைக் கூற முடியும். உதாரணமாக, இப்போது ஒரு புதிய சட்டத்தை முன்மொழிய இருக்கிறார்களாம். அது என்னவெனில் வயதான தாய் தந்தையரை புறக்கணிக்கும் மகன்களுக்கு சிறைத் தண்டனை தர இருக்கிறார்களாம். அது சரி. ஆனால் முன்பாவது பெண்ணை படிக்க வைக்கும் செலவு இல்லை. இப்போது படிக்கவும் வைத்து வரதட்சணையும் கொடுத்து திருமணம் முடித்து வைக்கும் பெற்றோர்களைப் பராமரிக்கும் கடமை பெண்ணுக்கு இல்லை என்று விதி செய்து வைத்திருக்கும் பண்பாட்டையும் அந்த பண்பாட்டை இன்றும் பராமரிக்கும் இந்த சட்டங்களையும் நீதித் துறை அமைப்பையும் எப்படி தண்டிப்பது என்று எங்களுக்கு தெரியவில்லை.

இது ஒரு புறமிருக்கட்டும். இந்த சட்டத்தின் நோக்கம்தான் என்ன? முதியோர்களை பாதுகாப்பதா இல்லை குடும்ப அமைப்பை பாதுகாப்பதா? முதியோர் பாதுகாப்புதான் நோக்கம் என்றால் இந்த அரசு என்ன செய்ய வேண்டும்? முதியோர் இல்லங்களை நிறுவி அந்த பாராமரிப்புக்கான செலவுத் தொகையை மகன் ஊதியத்திலிருந்து அரசே வசூலித்துத் தர வேண்டும். அப்போதுதான் முதியோர் பாதுகாப்பு என்ற நோக்கம் நிறைவேறும். அதை விடுத்து எவன் வெறுத்து ஒதுக்கினானோ மறுபடியும் அவன் நிழலிலேயே மீண்டும் அந்த முதியோர்களை வாழ விடுவதா அவர்களுக்கான பாதுகாப்பைப் பெற்றுத் தரும்? அந்த வாழ்க்கையில் அவர்களுக்கு என்ன தன்மானம் இருக்கும்? இங்குதான் இந்தக் கட்டுரையின் துவக்கத்தியில் கூறியிருக்கும் வார்த்தைகளை நாம் மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறோம். தன்மானமுள்ள வாழ்க்கையை இந்த குடும்ப அமைப்பு பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்குமே தொடர்ந்து தருவதில்லை. ஆக இந்த சட்டங்கள் மூலமாக இந்த அமைப்பு மீண்டும் தன்னை காப்பாற்றிக் கொள்ள எத்தனிக்கிறதேயல்லாமல் மனிதர்களுக்கான பாதுகாப்பான தன்மானம் நிரப்பிய வாழ்க்கை குறித்த சிந்தனை இன்னும் மலராமல்தானிருக்கிறது. இது ஒருபுறமிருக்க இப்படி சட்டம் போட்டுதான் இந்த அமைப்பை காப்பாற்ற வேண்டுமென்றால் வாழ்வதற்கான ஒரே வழி இதுதான் என மயங்குவதில் என்ன இருக்கிறது?

அடுத்து குழந்தை வளர்ப்பை எடுத்துக் கொள்வோம். காட்டுமிராண்டி நிலையிருந்த போது மனிதனின் வாழ்க்கை விலங்குகளோடு போராடுவதில் கழிந்தது. இன்று மனிதன் இருக்கும் திசையிலேயே விலங்குகள் இல்லை. இன்றும் மனிதன் போராடிக் கொண்டிருக்கிறான். யாருடன்? சக மனிதர்களுடன்தான். இனத்தினால் பிரிந்திருப்பது ஒருபுறமிருக்கட்டும். ஓர் இனமாகக் கூட ஒன்றுபட முடியாமல் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு விரோதியாக வாழ்ந்து கொண்டிருப்பதற்கு என்ன அடிப்படைக் காரணம்? தனி உடமையை பேணும் பொருட்டு தோன்றிய அடிமை அமைப்பான குடும்ப அமைப்பில் சுய நலமிக்கவர்களாக குழந்தைகள் வளர்க்கப்படுவது இதில் ஒரு முக்கிய பங்காற்றுகிறது என்றுதான் நமக்கு தோன்றுகிறது. இங்கு குழந்தைகளுக்கான பொதுப்புத்தியே ‘தான்’ ‘தனது’ என்பதாக அமைந்து போவது தவிர்க்க இயலாதாக இருக்கிறது.

குழந்தைகள் பொது சமூகக் கூடங்களில்தான் வளர்க்கப்பட வேண்டும். தனி நபர்களாகிய தாய் தந்தையர் பொறுப்பில் குழந்தைகள் வளரும் வரையிலும், பொது உடமை சிந்தனை வேர்களை நாம் குழந்தைகளிடம் ஏற்படுத்தவே முடியாது. நாம் என்னதான் ‘சனநாயகப் படுத்துகிறோம்’ ‘ஆண்களைத் திருத்துகிறோம்’ என்றாலும் குடும்பம் என்பது அடிப்படையில் தனி உடமைக்கான ஓர் அமைப்புதான். பொது வெளியை அங்கீகரிக்காது எனவே முதியோர் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் வளர்ப்பு இரண்டு முகாமையான நோக்கங்களுக்குமே இந்த குடும்ப அமைப்பு தகுதி வாய்ந்த பொருத்தப்பாடுடையது அல்ல. மாறுபட்ட வடிவங்களில் மனித வாழ்க்கையை அங்கீரிக்கிற பக்குவத்தை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சமூகம் என்பதை பலமானவர்கள் பலமில்லாவர்கள் என்று புரிந்து கொள்ளாமல் வேறுபட்ட திறன்களும் வல்லமைகளும் உடையவர்கள் என்ற புரிதலை வளர்ப்பது குறித்தும் எல்லோரும் அவரவர் வழியில் வாழ்வதற்கான பொதுத்தளமாக சமூக வாழ்க்கையை மறு கட்டமைப்பு செய்வதை நோக்கியும் நாம் சிந்திக்க வேண்டும். இதற்கெல்லாம் மேலாக இயல்பாகவே உருவாகி வரும் மாற்றங்களை ஏற்றுக் கொள்கிற இயக்கங்களை உருவாக்கினாலே சிறந்த செயல்பாடாகும். அந்த அடிப்படையில் நமது தோழர்கள் தங்கள் வாழ்க்கையில் அமைப்புகளில் கீழ்க்காணும் செயல் திட்டங்களை வகுத்துக் கொண்டு பணி யாற்ற வேண்டியதை தங்கள் இயக்க செயல்பாடுகளில் ஒன்றாகவே கருத வேண்டும்.

குழந்தைகள் மற்றும் முதியோர் பராமரிப்பில் ஆக்க பூர்வமாகக் கவனம் செலுத்துவது

அதற்கான அமைப்புகளை ஏற்படுத்துவது அல்லது அம்மாதிரியான அமைப்புகளுக்கு உதவுவது

அந்த இல்லங்களை அனாதை இல்லங்கள் என்று கொச்சைப்படுத்தாமல் சிறந்த வாழ்விடங்கள் என்ற சமூக மரியாதையை ஏற்படுத்தித் தருவது.

“வீட்டுக்கு ஓர் அடுப்பங்கரை என்பதும் ஒவ்வொரு ஆம்பிளைக்கும் ஒரு பொம்பிளை என்பதும் அடியோடு ஒழிந்து போக வேண்டும்” என்றார் பெரியார். அந்த வார்த்தைகளை ஆழ்ந்து சிந்திப்பதே நமக்கு பல உண்மைகளை விளக்கும்

No comments: