இந்துச் சமூக அமைப்பில் சட்டங்களை விட மரபே கோலோச்சுகிறது. பெண்கள் மரபுக்குள் மிக ஆழமாகப் புதைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆண்களுக்கு இம்மரபு அளவற்ற அதிகாரங்களை வழங்கி இருப்பதால் மிகக் குறைவான ஆண்களே பெண்கள் உரிமைகளைப் பேசுகின்றனர். எனவே பெண்கள் இயக்கத்தின் தெருப் போராட்டங்கள் மிகக் குறைவாகவே நடக்கின்றன. இத்தகைய நிலையில் பெண்கள் தங்கள் வாழ்நிலைப் பிரச்சினைகளில் குறைந்தபட்சம் சட்டத்தின் உதவியையாவது நாட வேண்டியிருக்கிறது. ஆனால் அந்தச் சட்டங்களின் நிலை என்ன..?
பெண்களுக்கான சட்டப்பிரிவுகளில் மிகக் கொடூரமானது 498- சட்டப்பிரிவாகும். ஒருவன் மாற்றானின் மனைவியை அப்பெண்ணின் சம்மதத்தோடு உரிமையாக்கிக் கொண்டால் அவன் மீது வழக்குத் தொடுக்க கணவனுக்கு இச்சட்டப் பிரிவு உரிமை வழங்குகிறது. இச்சட்டப்பிரிவு பெண்களின் மீதான அவர்களின் சுதந்திரத்தின் மீதான (குறிப்பாக பாலியல் சுதந்திரம்) கடுமையான அடியாகும், ஆண்களுக்குப் பெண்கள் மேல் வரம்பற்ற அதிகாரத்தை இச்சட்டப்பிரிவு வழங்குகிறது.
பெண்கள் மாற்றானை விரும்பினால் அது குடும்ப அமைதியைக் குலைக்கும் என ஒரு ஆண் நினைக்கலாம். ஆனால், அப்படிப்பட்ட நிலைக்கு கணவனும் அவன் சுற்றத்தாரும் காரணமாகயில்லாமல் பெண் தனித்து இத்துணிச்சலான முடிவுக்கு வந்து விடுவதில்லை. மனைவியை விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும் கணவன், முதல் மனைவிக்கு (குழந்தைகள் உள்பட) உயிர் வாழத் தேவையானதை மட்டும் ஜீவானம்சமாகக் கொடுத்து விட்டால் போதும் (அவள் சுயசம்பாத்தியம் இல்லாதிருந்தால் மட்டுமே) என்று சொல்லும் சட்டம் அதையே பெண் செய்தால் அவளின் வாழ்க்கையையே கேள்விக்குள்ளாக்கித் தண்டிக்கிறது.
கணவன் மனைவியைப் புறக்கணித்து விட்டு வேறொரு பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்ளலாம் அல்லது அதை விடக் கொடுமையாக கெட்ட வார்த்தைகளால் வசைமாரி பொழிந்தாலும் கணவனை விட்டு மனைவி பிரிந்துபோய் விடக்கூடாது என்பதே இச்சட்டத்தின் உட்பொருளாகும். மனைவியை அடிக்கலாம், வதைக்கலாம், சித்திரவதைப் படுத்தலாம், ஆனால் கணவனை விட்டுப் பிரியக் கூடாது அல்லது தான் சாகும்வரை அவனையே கணவனாகச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஏற்பாட்டிற்கே இச்சட்டம் வழிவகை செய்கிறது.
பெண்களைப் பொருத்தவரையிலும் இந்து தர்மமும், மனுநீதியும் நிகழ்காலத்திலும் சட்டமாக இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. ஒரு ஆண், அவனை மையப்படுத்தி ஒரு குடும்பம், அவனுக்கு சாதகமான இயக்கங்கள், சட்டங்கள், அவனுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டும் அரசு- இப்படியாகப் பெண்கள் மீது ஆணாதிக்க சூழ்ச்சி வலை பின்னப்படுகிறது. சாதிக் குடும்பத்தைக் காப்பாற்றுவதும், அரசைக் காப்பாற்றிக் கொள்வதும் நேரடியாகவே சம்பந்தப்பட்டிருக்கிறது.
ஒரு பெண் தன் கணவனிடம் விவாகரத்து கோரும்போது, அவள் தான் இருக்கும் கணவன் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவதோடு கணவனின் சொத்துக்கள் மீதும் அவளுக்கு உரிமையில்லை என்று சட்டம் கூறுகிறது. அவளுக்குச் சட்டம் வழங்கும் உரிமை என்பது ஜீவானாம்சம் கோருவது மட்டுமே. ஜீவனாம்சம் என்பது மிக மிகச் சிறிய தொகையாக மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இங்கும், இந்துக் குடும்பம் என்ற நிறுவனம் சிதையாமல் கட்டிக் காக்கப்பட வேண்டும் என்பதே சட்டத்தின் நோக்கமாக இருக்கிறது.
கிறித்தவப் பெண்ணுக்குக் கணவனின் வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்கே மனைவிக்கான ஜீவனாம்சம் என்கிறது சட்டம் (1869 ஆண்டு சட்டம்) முஸ்லீம் பெண்களைப் பொறுத்தவரையில் ஜீவனாம்சம் கிடையாது என்கிறது சட்டம். அதாவது தற்கொலை செய்துகொள் அல்லது சிவப்பு விளக்குப் பகுதிக்குப்போ என்று சொல்லாமல் சொல்கிறது. இவையெல்லாம் எதைக் காட்டுகின்றன? பாலியல் ஒடுக்குமுறைகளே சட்டமாக இருக்கின்றன என்பதுதான். பெண்களின் பேராட்டங்களினால் ஏற்படுத்தப்பட்ட சட்டங்களும், ஆண்களின் கருணையையும் தயவையும் அடிப்படையாகக் கொண்டு இருக்கின்றன என்பதுதான்.
(பிளேவியா அக்னீஸ் எழுதிய சட்டமும் பெண்களின் பாலியல் உரிமைகளும் நூலின் முன்னுரையில் தோழர் கருணா மனோகரன்)
நன்றி* புதிய பெண்ணியம் அக்தோபர் 2006
No comments:
Post a Comment