Thursday, November 26, 2015

தாலி பெண்ணுக்கு அழகா? அடிமைச்சங்கிலியா? – வினோத் களிகை


in சமூகம், சாதியம், சிறப்புக் கட்டுரைகள், பண்பாடு, பெண்ணுரிமை April 1, 2015 0

மார்ச்-8 பன்னாட்டு உழைக்கும் பெண்கள் நாளை ஒட்டி ஒரு செய்தித் தொலைக்காட்சியில் நடந்த ’தாலி’ பற்றிய விவாதத்தில் தொடங்கி, அது இந்துத்துவ பயங்கரத்தின் ”டிபன் பாக்ஸ்” வெடிகுண்டு என தொடர்ந்து, இன்று பல கட்டங்களைத் தாண்டி தி.க. இயக்கம் அறிவித்துள்ள தாலி அகற்றும் நிகழ்ச்சி, ’தாலி’ தமிழர் பண்பாடு என்று இந்நிகழ்வை எதிர்ப்பது என போய்க்கொண்டே இருக்கிறது…
தாலி பற்றி சிந்திப்பதற்கு முன் நடக்கும் சில பிழையான விவாதங்களைக் காண்போம்…
1) தமிழ்ச் சமூகத்தில் தாலி ஆரம்ப காலகட்டத்தில் இருந்து குடும்பத் தலைவியால் திருமணத்தின் குறியீடாக அணியப்பட்டு வருகிறது. அது தமிழர் பண்பாடு, பாரம்பரியம் என்று சொல்வது.
2) அன்பும் அறனும் நிறைந்த இல்லறத்தில் குடும்பத் தலைவன்-தலைவிக்கு இடையே குடும்பத் தலைவிக்கு மட்டும் குடும்ப உறவின் புனிதக் குறியீடு தாலி, இது மிகவும் அவசியமானது என்று பேசுவது.
3) ஒரு பெண்ணிற்கு குடும்ப அமைப்பில் மட்டுமல்ல சமூக அமைப்பிலும் பொருளாதார வலிமையில்லாததை, எந்த முடிவையையும் தானாக எடுக்க முடியாததை, சம்மற்ற தன்மையைப் பற்றி பேசாமல் ஒரு பக்கம் தாலி அணிவது குடும்பப் பெண்ணுக்கு புனிதம் என்றும், இன்னொரு பக்கத்தில் தாலி மறுத்தல்தான் முற்போக்கு என்றும் பேசுவது.
எப்படியாயினும் இன்றைக்கு எதார்த்தத்தில் பெண்கள் தாலியை குடும்ப உறவின் அடையாளமாக அணிந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அது எப்படி? என்ற கேள்வி எழுகிறது… மனித சமூக வளர்ச்சியை ஒப்பிட்டு அறிந்தால் எப்படி என புரிவது எளிது.
ஆதிப் பொதுவுடைமைச் சமூகமும், குடும்பமும்:
ஆரம்பத்தில் சிறு சிறு கூட்டமாக வேட்டையாடி நாடோடியாக அலைந்து திரிந்த மனித சமூகம் விலங்குகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள கூட்டத்தை பெருக்கியது. பின்னர் புதுப்புது வேட்டைக்கருவிகளை கண்டறிந்து முன்னேறி உற்பத்தி கருவிகளை கண்டுபிடித்த மனித சமூகம் நீர் உள்ள பகுதிகளில் நிலையான உணவு உற்பத்தியில் ஈடுபட்டதும் கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு முறையும் சில ஒழுங்குமுறைகளையும் உருவாக்கியது.
உற்பத்தி செய்த உணவு தானியங்கள், கால்நடைகள், செல்வங்கள் பொதுவில் தாயின் கட்டுப்பாட்டில் நுகரப்பட்டன. இத்தகைய இனக்குழு சமூக அமைப்பில் உறைவிடமும் பொதுவாகவே இருந்தது. அதனால் இந்த தாய்வழிச் சமூகத்தில் குழந்தைகள் தாயின் வழிப்படுட்டு மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டனவேயன்றி தந்தை வழிப்பட்டல்ல, அதற்கான கேள்வியும் இங்கே எழவில்லை. குடும்பம் என்ற அமைப்பும் தோன்றவில்லை அல்லது அதற்கான தேவையில்லை. தாய்வழிச் சமூக அமைப்பிலிருந்து தந்தைவழி சமூக அமைப்பாக மாறிய பின்னர் குடும்ப அமைப்பு முறையும், தனிக்குடும்பத்திற்கென உறைவிடமும் தோன்றியது. இந்த மாற்றத்திற்கான அடிப்படை காரணம் முன்பு சமூகத்திடம் இருந்த சொத்து, இப்பொழுது தனி நபர்களிடம் கைமாறியதே.
இதனால் தன்னிடம் உள்ள சொத்து அடுத்த தலைமுறையில் யாருக்கு? என்ற வினா எழுந்தபோது தந்தை வழி குழந்தைகளுக்கு என்றானது. தந்தை வழி சமூக அமைப்பின் வளர்ச்சியிலேயே குடும்ப அமைப்பில் பெண்ணுக்கு கற்பு, தாலி என்பது முக்கியமாக ஆனது. அதே சமயம் ஆண்கள் முன்பு போலவே பலதார மணத்திலும், பொது மகளிர் முறையிலும் தொடர்ந்தனர். இது இன்று வரை தொடர்கின்றது, அதாவது பெண்களுக்கு மட்டும் தான் கற்பு , தாலி போன்ற வரையறைகள் உருவாக்கப்பட்டன, ஆண்களுக்கல்ல. ஏனென்றால் இவற்றை உருவாக்கியது ஆண்கள்.
GA6703_1i_MG_8577
சாதிய நிலவுடைமை தனிச்சொத்து சமூகமும் குடும்ப அமைப்பும் தாலியும்:
தொடர்ச்சியான உற்பத்திக் கருவிகள், உற்பத்தியின் வளர்ச்சியால் உருவான மிகையான பொதுச் சொத்தை தன்னுடைய ஆயுத பலத்தால் வசப்படுத்தி உழைக்காமல் அந்த இனக்குழுவை கட்டுபடுத்தும் தலைமைப் பொறுப்பிற்கு ஒரு பிரிவு வந்தது. மற்றவர்களிடமிருந்து ஆயுதங்களைப் பறித்து ஒடுக்கி பெரும்பான்மையினரை உழைக்கும் பிரிவினராக மாற்றியது. பொதுச்சொத்து இப்போது இவர்களின் தனிச்சொத்தானது. அடிமை வர்க்கத்தை உருவாக்கியதன் மூலம் ஓய்வு பெற்ற ஒரு பிரிவினர் கலை, அறிவியல், வரலாற்றியல் என்பது போன்ற புதிய பிரிவுகளை உருவாக்கத்தளைப்பட்டனர். தனிச்சொத்துப் பிரிவினரைப் பாதுகாக்கவும், உழைப்புப் பிரிவினரை அடக்கி ஒடுக்கவும் சமூக நிர்வாகத்தை கவனிக்கவும் அரசு உருவாகியது.
இப்படியான பல்வேறு இனக்குழுக்களின் சிறுசிறு கூட்டங்கள்தான் பிற்காலத்தில் ஒரு சிற்றரசின் கீழ் ஒரே ஊரில் பல்வேறு சாதியினராக சேர்ந்து சாதிய நிலவுடைமைச் சமூகமாக வாழ்ந்துவருகின்றனர். அதனால் இனக்குழுத்தன்மை சாதியச் சமூகத்திலும் நீடிக்கிறது. செல்வத்தின் மீதான பங்கீடு சாதி வாரியான‌ ஏற்றத்தாழ்வோடு உள்ளது. இந்த தனிச்சொத்து சமூக அமைப்போடு தொடர்புடைய குடும்ப அமைப்பின் இறுக்கமும் அதிகமாகியுள்ளது. இதனால் பண்பாட்டுத்தளத்தில் கதைகள், வழக்காறுகள் குடும்ப அமைப்பை மிக முக்கியம் என்று வலியிறுத்துகின்றன. இதற்காக சில கடவுளர்களும் கூட தோன்றி குடும்பத்தலைவி கற்புக்கரசியாக இருக்க வேண்டும், தாலி மிகவும் புனிதம் என்று கூட சொல்லிவருகின்றார்கள்…
முதலாளிய வளர்ச்சியும் குடும்ப அமைப்பில் நடந்த மாற்றமும்
தொழிற்புரட்சி காலத்திற்கு பின் உற்பத்தி கருவிகளின் அதிதீவிர வளர்ச்சியால் ஐரோப்பிய சமூகம் பெருவளர்ச்சியை நோக்கி முன்னேறியது. தனிச்சொத்தும் செல்வமும் பெருகி மூலதனம் பலமடங்காக திரண்டது. மூலதனமே அங்கு அரசன். அதற்கு முன் ஆண்-பெண் வேறுபாடு முக்கியமல்ல. பெண்கள் உற்பத்தியில் மட்டுமின்றி அரசியலிலும் பங்கெடுக்க ஆரம்பித்தனர் அல்லது அதற்கான தேவையேற்பட்டது. அதனால் குடும்ப அமைப்பிலும் மாற்றம் வர ஆரம்பித்தது. ஆணும் பெண்ணும் சமமாக இருவருமே மோதிரம் மாற்றிக் கொள்வதும், திருமணம் பண்ணிக்கொள்ளாமலே இணையர்களாக வாழ்வதும் இன்றைய நிலையில் மேலைத்தேய நாடுகளில் நடந்து வருகிறது.
புதிய தொழில் வளர்ச்சியினால் உருவான முன்னேறிய ஐரோப்பிய அரசுகள் மேலும் செல்வங்களையும் மூலதனத்தையும் பெருக்க ஆசிய, ஆப்பிரிக்க, அமெரிக்க நாடுகளை பிடிக்கும் போட்டியில் ஈடுபட்டன. அப்படித்தான் ஆங்கிலேயப் பேரரசு தெற்காசியா முழுவதும் பிடித்து அடிமையாக்கி அந்த நாட்டின் வளங்களையும், செல்வங்களையும் சுரண்டியது. இது நம்முடைய சாதிய சமூக பொருளியல் அமைப்பில் உள்ளீடாக சில மாற்றங்களை ஏற்படுத்தியது.
நிலத்தில் அடிமை உழைப்பாளிகளாக இருந்த பலர் இப்போது சுதந்திரக் கூலிகளாக நகர்ப்புறத்தில் குடியேறினார்கள். இந்த மாற்றம் தான் பண்பாட்டுத்தளத்தில் நமது குடும்ப அமைப்பிலும் மாற்றத்தை கோரி நின்றது. நிலத்தில் வேலை பார்த்தோ வீட்டு வேலைகளை மட்டும் பார்த்தோ அதுவரைப் பொருளாதார வலிமை இல்லாமல் குடும்ப அமைப்புக்குள் சிக்கிய இருந்த நம் பெண்கள் பொருளாதாரத்தில் ஆண்களை மட்டும் சார்ந்து வாழ வைக்கப்பட்டார்கள். பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் சீர்திருத்த பரப்புரைகளும், செயல்பாடுகளும் பெண்களுக்கு தன்மான உணர்வைத் தூண்டியது, சமூக அமைப்பில் சம உரிமைக்காக போராடினார்கள். குடும்ப அமைப்பில் ஆணும் பெண்ணும் சமத்தன்மையை வலியுறுத்தி பெண்களுக்கு தாலி அணியாத சுயமரியாதைத் திருமணங்களைச் செய்துகாட்டி அதில் வெற்றியும் பெற்றது திராவிட இயக்கம்.
ஆக பொருளியல் அடிப்படையிலான உற்பத்தி மற்றும் சமூக அமைப்பின் வளர்ச்சிப் போக்கில்தான் குடும்ப அமைப்பும் மாற்றத்திற்கு உட்பட்டு வளர்ச்சியடைகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கென்று தனியாக பெரிய வளர்ச்சி என்று எதுவும் இல்லை. இந்த பண்பாட்டு அசைவு சமூக அரசியல் பொருளியலில் நடக்கும் மாற்றத்தைப் பொருத்தே வெகுவாக மாறுகிறது. அதேவேளை இப்பண்பாடு அந்தப் பொருளியலை காக்கப் பயன்படும் வேலியாகவும் இருக்கும்.
11102745_767117680053457_8228579895938062067_n
தமிழர் பண்பாட்டில் தாலி:
தமிழர் பண்பாடு கோலோச்சி இருந்த சங்க காலத்தில் மட்டுமல்ல ‘தாலி’ என்ற அணிகலன் குடும்ப உறவின் குறியீடாக 10ஆம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டில் எந்தப் பெண்ணும் அணியவில்லை என்பது சங்க இலக்கியங்கள் முதல் நவீன இலக்கியங்கள் வரை கற்றுணர்ந்த தமிழ் ஆய்வறிஞர்களும், கல்வெட்டு செப்பேடுகள், பல தரவுகள் அடிப்படையில் அறிவியல்ப்பூர்வமாக ஆய்வு செய்யும் வரலாற்றியல் ஆய்வாளார்களும் ஏற்கனவே மெய்ப்பித்த உண்மை. தாலி எனும் வார்த்தை தொங்கும் அணிகலனை குறிக்கிறது. கழுத்தில், காதில், அரைஞான் கயிற்றில் என ஆணும் பெண்ணும் தொங்கவிடும்படி அணிந்த அணிகலன்களைத்தான் ‘தாலி’ என்று குறிப்பிட்டுள்ளார்கள் நம் முன்னோர்கள். 10ம் நூற்றாண்டுக்கு பின்னரே தாலி நம் சமூகத்தில் திருமணச் சடங்கில் அணிய ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதுவும் சாதிக்கு ஒரு சடங்கும் தாலியும் இங்குண்டு.
துணைவனை இழந்த இளம் விதவைப் பெண்களை ”தாலி அறுத்தவள்”, ”முண்டச்சி” என்ற சாதிகளும் இங்குண்டு (”விதவை”, ”முண்டச்சி” போன்ற வார்த்தைகளுக்கெல்லாம் ஆண்பால் சொற்களே கிடையாது), துணைவனுடன் கருத்து வேறுபாடென்றால் பிரித்து தாலியை ”அறுத்து கட்டும்” சாதிகளும் இங்குண்டு. தாலி புனிதமானது என்றால் தான் விரும்பிய வேறு சாதி ஆணை ஒரு பெண் திருமணம் செய்து கொண்டதற்காக அதே தாலியை அறுத்து சாதி கவுரவத்திற்காக அவர்களை கொலை செய்யும் அளவிற்கு செல்வது ஏன்?  சாதியோடு பண வலிமை பிரதானமாக உள்ள சமூகத்தில் தாலியின் புனிதமும், கற்பும் அதற்கு துணைசெய்யத்தான் என்பது கண்கூடு. தாலியை கற்போடு பிணைத்து “பண்பாட்டை” காப்பாற்ற நினைப்பவர்கள் சாதியை காப்பற்ற நினைப்பவர்கள் என்பதும் தெளிவு. பார்ப்பனிய சாதிய ஒடுக்குமுறையில் வெளியேற நினைத்து கிறித்தவம், இசுலாம் தழுவியவர்களும் கூட வேறெங்கும் இல்லாத தாலியை அணிவது சாதிய பொருளியல் சமூக கட்டமைப்புக்குள் தான் அவர்களும் இருக்கிறார்கள் என்பதை தெளிவாகக் காட்டுகிறது.
பெண்கள் தாலியை அகற்றுவது தவறா?
பெண்கள் தாலியை வைத்துதான் குடும்ப உறவில் துணைவனிடம் அன்பையும் உண்மையையும் காட்ட வேண்டுமா என்ன? அது இல்லாமலேயே அன்போடும் அறனோடும் இல்லறம் நடத்தினால், குடும்ப அமைப்பில் சமமற்ற தன்மையை வலியுறுத்தும் தாலி வேண்டாம் என்றால் தடுப்பதற்கு சனநாயக நாட்டில் வேறுயாருக்கு உரிமை இருக்கிறது? பெண்கள் தன்மானத்தோடும், பொருளாதார வலிமையோடும், சுதந்திரத்தோடும், பொது வாழ்விலும் சமத்துவத்தோடு சகமனிதனாக வாழ்வதற்கு தாலி என்ற அணிகலன் மட்டும் எப்படி தடையாக இருக்க முடியும்? யோசிப்போம்… இன்றைய நவீன காலகட்ட்த்தை விட்டுவிட்டு காட்டுமிராண்டி நாடோடி கால காட்டத்திற்கு பின்னோக்கி செல்ல விரும்புவோர் யாருமுண்டோ… அதுபோல சமூக வளர்ச்சிற்கேற்ப ஆரோக்கியாமன மாற்றங்களும் பிறக்க வேண்டாமா…?? சிந்திப்போம்…
இறுதியாக சமூக அமைப்பில் நடக்கும் மாற்றம் தான் குடும்ப அமைப்பில் மாற்றத்தை, குடும்பத்தில் சமத்துவத்தை கோரி நிற்கிறது. ஆக பெண்கள் ”தாலி அகற்றல்” போன்ற போராட்டங்கள் மூலம் குடும்ப அமைப்பில் சமத்துவத்தை அடையப் போராடுவது சமூக அமைப்பில் ஏற்படப்போகும் சமத்துவத்தின் வெற்றியில் தான் முழுமையடைய முடியும்… சாதிய ஏற்றத்தாழ்வான பொருளியல் கட்டமைப்புக்கு மாற்றாக சமூக சமத்துவத்தை நோக்கிய நம் போராட்டங்களையும் வீரியமாக முன்னெடுப்போம்… அதற்கான சனநாயகப் பண்பாட்டை வளர்த்தெடுப்போம்…
தாலிதான் பொண்ணுக்கு வேலியா?
காக்க வாரான் காவிப்பயல் போலியா
சமூகநீதி மண்ணிது வெளியேநீ போறீயா…
- வினோத் களிகை.
http://www.visai.in/2015/04/01/mangal-sutra-is-women-beauty-or-slave-chain/

No comments: