Tuesday, November 10, 2015

தேவை, பாலின சமத்துவம் ----- பூமா சனத்குமார்


 

 

தில்லியில் டிசம்பர் 16ஆம் தேதி இரவு ஓடும் பேருந்தில் கொடூரக் கும்பலால் வன்புணர்ச்சிக்கு ஆளாகிச் சிதைந்த 23 வயதான மருத்துவ மாணவி பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்களையும் விவாதங்களையும் தொடங்கி வைத்தபடி, சிகிச்சைகள் பலனின்றி இறந்தாள்.கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊழல் எதிர்ப்புப் போராட்டங்களில் அரசியல் மயமாக்கப்பட்ட தில்லி இளைஞர்கள், மாணவர்கள் ஆகியோர் இச்சம்பவத்தால் கொதிப்படைந்து தன்னிச்சையாகப் போராட்டங்களில் ஈடுபட்டனர். தில்லியில் பெண்களுக்கும் குழந்தைகளுக்குமான பாதுகாப்பற்ற சூழல் அதிகரித்துவரும் நிலைமை பெண்களையும் இப்போராட்டங்களில் பங்கேற்கத் தூண்டியது. போலீஸ் தடியடி, கண்ணீர்ப்புகை, தடுப்பு அரண்கள் உள்ளிட்ட அரசாங்கத்தின் அடக்குமுறைகளையும் மீறி மாணவர் அமைப்புகளும் பெண்கள் அமைப்புகளும் பங்கேற்றதால் எதிர்ப்புப் போராட்டங்கள் மேலும் வலுவடைந்தன.
கோபம் கொப்பளித்த இப்போராட்டங்களின் முக்கியத்துவத்தைத் தனியார் செய்தி ஊடகங்கள் உடனடியாக உணர்ந்தன. போராட்டங்கள் குறித்த செய்திகளையும் விவாதங்களையும் ஊடகங்கள் தங்கள் TRP தரவரிசைக்கான சந்தை உத்திகளாக வழங்கியிருப்பினும் அவை மக்களிடையே பரந்த அளவில் விவாதங்களையும் விழிப்புணர்வையும் தோற்றுவித்தன.சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு, பதவி உயர்வுக்கான இட ஒதுக்கீட்டு மசோதா உள்ளிட்ட நாடாளுமன்ற நடவடிக்கைகளிலும் வெளியிலும் எதிர்ப்புகளைச் சந்தித்துக்கொண்டிருந்த காங்கிரஸ் ஆட்சியாளர்கள் போராட்டக்காரர்களுக்குப் பதிலளிக்கச் சில நாட்கள் பிடித்தன. பிரதமர் மன்மோகன் சிங்கின் வார்த்தைகளில் சொல்வதானால் மாபெரும் தேசிய அவமானம் எனக் கருதத்தக்க தில்லி மாணவி வன்புணர்ச்சிக் கொடுமை தொடர்ந்து மக்களிடையே நிலவிவரும் எதிர்ப்புணர்வைத் திசைமாற்றியதில் ஆட்சியாளர்கள் சற்று ஆசுவாசம் அடைந்திருக்கக்கூடும். தில்லிப் போராட்டங்களைத் தொடர்ந்து பிறநகரங்களிலும் போராட்டங்களும் விவாதங்களும் பரவி வலுவடைந்துவந்த நிலையிலும் ஐ.மு.கூட்டணி ஆட்சியாளர்கள், பலரது விமர்சனங்களுக்குள்ளானதும் மக்களை - குறிப்பாகப் பெண்களையும் குழந்தைகளையும் - பெருமளவில் பாதிக்கக்கூடியதுமான, ஆதார் அட்டை அடிப்படையிலான நேரடிப் பணமாற்றுத் திட்டத்தைச் சமூக நலத் திட்டங்களுக்கு மாற்றாகத் தொடங்கியதைத் தீவிரமாக விரிவுபடுத்திக்கொண்டிருந்தனர். பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதைவிடப் புதிய தாராளமயக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதே ஆட்சியாளர்களுக்குப் பிரதானமாக உள்ளது.
வன்புணர்ச்சிக் குற்றவாளிகள் உடனடியாகத் தண்டிக்கப்பட வேண்டும், தூக்கிலிடப்பட வேண்டும் எனக் கோரிக்கைகள் வலுத்துவந்த நிலையில் தில்லி மாநகரக் காவல் துறையை நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்துள்ள மத்திய அரசும் தொடர்ந்து பிறமாநில அரசுகளும் பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் நடைமுறைகளையும் செயல்படுத்துவதாக அறிவித்தன. தில்லி மாணவி வன்புணர்ச்சிச் சம்பவத்தை விசாரிக்கவும் தில்லியில் பாதுகாப்புக் குறைபாடுகளைக் களைந்து உறுதிப்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கவும் நீதிபதி உஷா மேரா தலைமையிலான ஒரு குழுவையும் பாலியல் வன்கொடுமைக் குற்றங்களுக்குத் தண்டனைகளைக் கடுமையாக்கும் விதமாகச் சட்டங்களை மறு பரிசீலனை செய்வதற்காக நீதிபதி ஜே.எஸ். வர்மா தலைமையில் மற்றொரு குழுவையும் மத்திய அரசு நியமித்தது. தமிழக முதல்வர் உடனடியாக முன்வந்து வன்புணர்ச்சிக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை, ஆண்மை நீக்கம், குண்டர் சட்டம் உள்ளிட்ட கடுமையான தண்டனைகள், விரைவு நீதிமன்றங்கள் எனத் தனது செயல்திட்டத்தை அறிவித்தார். ஆனால் தமிழக அரசு திருக்கோவிலூர் இருளர் பெண்கள் வன்புணர்ச்சி வழக்கை விரைவுபடுத்துவதில் அக்கறையின்றிச் செயல்படுகிறது. தில்லி மட்டுமின்றி வேறு சில நகரங்களிலும் கிராமங்களிலும் அச்சமயத்தில் நிகழ்ந்த பாலியல் வன் கொடுமைகள் ஊடகங்களில் முதன்மைச் செய்திகளாயின. உலகளவில் மரண தண்டனைக்கு எதிரான கருத்தாக்கங்கள் வலுப்பெற்றுவரும் நிலையில் உணர்வுமேலிட்ட இத்தருணத்தை அதற்கான ஆதரவாக மாற்றச் சிலர் முயன்றனர். பா.ஜ.க. தவிர்த்த பிற கட்சிகளும் மனித உரிமை அமைப்புகளும் பாலின வன்கொடுமைகளுக்கு மரண தண்டனை தவிர்த்துப் பிற கடுமையான தண்டனைகளை நீதிபதி ஜே.எஸ். வர்மா குழுவிடம் பரிந்துரைத்தன.
போலீஸ் கண்காணிப்பை அதிகமாக்குதல், தண்டனைகளைத் தாமதிக்காமல் வழங்குதல், கண்காணிப்புக் காமிராக்கள் பொருத்துதல், ஏற்கனவே உள்ள சட்டங்களைத் திருத்துதல், பாலியல் வன் கொடுமைகளைப் புதியதாக வரையறுத்தல், ஆதிக்க வர்க்கத்தின் தலையீடின்றி விரைவு நீதிமன்றங்கள் செயல்படுதல் என ஆலோசனைகள் குவியத் தொடங்கின. ஆட்சியாளர்களுக்கு இது குறித்து உண்மையிலேயே கவலையிருந்தால் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவை உடனடியாகச் சட்டமாக்க வேண்டும் என The Hindu தலையங்கம் எழுதியது. நிலுவையில் உள்ள வன்புணர்ச்சி வழக்குகளை விரைந்து முடிக்குமாறு உயர் நீதிமன்றங்களை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.பலரது கவனத்திற்கு உட்பட வேண்டிய பரிந்துரையை இடைநிலைக் கல்விக்கான மத்தியக் குழு (CBSE) வழங்கியது. மனித உரிமை மற்றும் பாலினம் குறித்த கல்வியை அறிமுகப்படுத்தப்போவதாக அது அறிவித்தது. ஆசிரியர்களின் பாலியல் வன்கொடுமைக்கு மாணவிகள் ஆளாகிவரும் நிலையில் மாநில அரசுகளின் கல்வித் துறைகளும் செயல்படுத்த வேண்டிய பரிந்துரை இது. ஆணாதிக்க மதிப்பீடுகளுக்கு மாற்றாகச் சமநிலைக்கான விழுமியங்களை இளம் வயதிலேயே கற்பிப்பது அவசியமானதாகும்.
இவையாவும் திறம்படச் செயல்படுத்தப்பட்டால் குற்றங்களையும் பாலியல் வன்கொடுமைகளையும் ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என்பதில் மறுப்பில்லை. இவை ஒருவகையில் ஆணின் ஆணாதிக்கப் பாலியல்பை ஒழுங்குபடுத்தலுக்கான முயற்சியும்கூட. இருப்பினும் அடிப்படையான சமூகக் காரணங்களைக் களைவதற்கான செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து முன்னெடுப்பது அவசியம்.பாலியல் வன்கொடுமைகளுக்கான தீர்வுகளாகப் பெண்கள் நவநாகரிக உடைகளை அணியக் கூடாது, இரவுகளில்
வெளியே நடமாடக் கூடாது, பள்ளி, பணி முடிந்ததும் தாமதிக்காமல் வீட்டிற்குத் திரும்ப வேண்டும், தனிப் பேருந்துகள், தனிப்பள்ளிகள் எனப் பெரும்பான்மையோர் அறிவுறுத்திப் பெண்களை மத்திய காலத்திற்கு இழுத்துச் செல்ல முயன்றனர். ஊடக விவாதங்களில் பங்கு பெற்றவர்களில் ஒரு சிலரே குறிப்பாக சல்மா, அருள்மொழி, வ. கீதா போன்றோர் சமூகத்தில் நிலவும் ஆணாதிக்கத்தை நோக்கிக் கவனத்தைக் குவித்தனர்.நுண் அதிகாரச் செயல்பாடுகளை ஆராய்ந்த மிஷேல் ஃபூக்கோ தனது The History of Sexualityஇல் பாலியல்பு கட்டமைக்கப்படும் வரலாற்றையும் தன்னிலைகளுக்கான சுய உருவாக்கச் சாத்தியப்பாடுகளையும் விவரிக்கிறார். தன்னிலைகளிலும் பாலியல்புகளிலும் செயல்படும் அதிகாரத்திற்கான ஒழுங்குபடுத்தும் தொழில்நுட்பங்களாகவே நமது சமூக உறவுகள் நிலவுகின்றன. குடும்பம் முதல் நாடாளுமன்றம் வரையிலான அதிகார அமைப்புகள், உற்பத்தி முதல் நுகர்வுவரையிலான பொருளாதார நிறுவனங்கள், இவற்றுக்கு இடைப்பட்ட சாதிய, வர்க்க, இன, மத நிலைகளினூடான சமூகத்தின் அதிகார உறவுகளில் எங்கும் பிணைந்திருக்கும் ஆணாதிக்கம் பெண்மையையும் பெண் பாலியல்பையும் தொடர்ந்து ஒழுங்குபடுத்திவருகிறது.
‘நமது சமூக வரிசையில் ஆண்கள் பெண்களை ஆளுதல் என்பது பிறப்புரிமையாக இருப்பதைக் கவனிக்கத் தவறிவிடுகின்றனர்; ஒத்துக்கொள்ளத் தயங்குகின்றனர். இந்த ஒழுங்கமைவின் மூலம் அறிவார்ந்த உள்முகக் காலனியாக்கம் பெறப்படுகிறது. இதற்குக் காரணம் நமது சமூகம் எல்லா வரலாற்று நாகரிகச் சமூகங்கள் போலவே தந்தையுரிமைச் (ஆணாதிக்கச்) சமூகமாக இருப்பதுதான். ஆதிகாரப் பிரிவுகள் - ராணுவம், தொழிற்சாலை, தொழில்நுட்பம், பல்கலைக்கழகங்கள், அறிவியல், அரசியல், நீதி - எல்லாம் முற்றும் ஆண்கள் கைகளில் இருப்பதே இந்த உண்மையை நீருபிக்கப் போதுமானதாகும்’. (Sexual Politics, Kate Millet. 1969, தமிழில் சுருக்கம்: பாலியல் அரசியல் பற்றிய கோட்பாடு, அருணா, மேலும் - 12, 1991).பொதுவாகக் குடும்பங்களில் குடும்பத் தலைவனாக, வருமானத்தை ஈட்டுபவனாக, சொத்துரிமை உடையவனாக, அறிவு வலிமை கொண்டவனாக ஆணையும் வீட்டினுள் சமைத்துப் பரிமாறுபவளாக, சேவை செய்பவளாக, கற்புடையவளாகப் பெண்ணையும் இன்றும் அடையாளப்படுத்துகிறார்கள். இவற்றில் சமீப காலமாகச் சற்றுத் தளர்வு ஏற்பட்டிருப்பினும் ஆணுக்கே முதலிடம் என்பது இன்றும் நடைமுறையாகவே உள்ளது. சொத்தில் சம உரிமை பெண்களுக்குச் சட்டரீதியாக உறுதிப்படுத்தப்பட்டிருந்தாலும் பெரும்பாலான குடும்பங்களில் அதை முழுமையாக நடைமுறைபடுத்துவதில்லை. பெண்கள் சமநிலை அடைவதற்கான பொருளாதார அடிப்படை இன்றும் பலவீனமாகவே உள்ளது.
சாதிக் கலப்புத் திருமணத்திற்கு எதிரான வன்முறைகளின்போதும் கௌரவக் கொலைகளின்போதும் சாதிய மேலாதிக்கமும் ஆணாதிக்கமும் பிணைந்து செயல்படுவதை அறிய முடியும். சமீபத்தில் தர்மபுரியில் நடந்த சாதிய மேலாதிக்க வன்முறைகளும் அதற்கு முன்பும் பின்புமான சாதித் தலைவர்களின் அறிக்கைகளும் மிரட்டல்களும் பெண்கள்மீதான அதிகாரத்தையே மையமாகக் கொண்டிருந்தன. (கருப்பையில் இருந்து தொடங்கும் சாதி ஒழிப்பு, மாலதி மைத்ரி, தீராநதி, ஜனவரி 2013). பெண்கள்மீதான வன்கொடுமைகளின் போது ஆணாதிக்கத் திமிர் மட்டுமின்றிச் சாதிவெறியும் இணைந்து செயல்படுவதைப் போல மத, இன மேலாதிக்கத்திற்கான மோதல்களின்போதும் பெண்கள் மீதான வன்புணர்ச்சி என்பது வன்முறைகளுக்கான வடிவமாகவே செயல்படுகிறது. மத்திய கால மன்னர்களுக்கிடையிலான போர்களிலும் மொகலாயர்களின் படையெடுப்புகளின்போதும் சமீபத்தில் ஈழப்போரின் போதும் இந்து, முஸ்லிம் கலவரங்களின்போதும் புணர்ச்சி வன்முறைகள் போர்க்கோலம் பூண்டன.ஆணாதிக்கத்தையும் சாதிய மேலாதிக்கத்தையும் செயல்படுத்துவதற்கான களங்களும் கருத்தியல்களும் மதரீதியான சடங்குகளிலும் தொன்மங்களிலும் இயைந்துள்ளன. (தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு (1994), அறம், அதிகாரம் (1997), ராஜ் கௌதமன்). இந்து, இஸ்லாமிய, கிருஸ்துவச் சமூகங்களின் தொல்கதையாடல்களில் வம்சத் தொடர்ச்சி, வம்ச விருத்தி என்பன ஆண்களையே மையமாகக் கொண்டுள்ளன. மகள் என்பவள் மற்றொரு வம்சத்திற்கு, குடும்பத்திற்குத் தானமாக (கன்னியாதானம்) கொடுக்கப்பட வேண்டியவள். குடும்பத்தினரின் இறுதிச்சடங்குகள் வம்சத்தைத் தொடரும் ஆண்களுக்குரியன; வாழவந்த பெண்களுடையவையல்ல.
சமூகத்தில் காலந்தோறும் அரசியல் பொருளாதார உறவுகள் மாற்றமடையும்போது அதன் அறவியலும் மாற்றமடைகிறது. இதனடிப்படையில் மதங்களின் வரலாற்றில் மதிப்பீடுகளும் வழக்கங்களும் மாற்றமடைகின்றன. மாற்றம் அடைவதன் மூலம் அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் இழக்கநேரிடுபவர்கள் மாற்றங்களை எதிர்த்துப் பழமைகளை வலியுறுத்துகின்றனர். ஆனைத்து மத, சமூகங்களின் பழமைவாதிகள் மாற்றங்களை வன்முறையுடன் ஒடுக்கத் தயங்குவதில்லை. எனினும் மாற்றங்களை முன்னெடுத்துச் செல்லும் மக்கள் வெற்றியடைந்தேவருகிறார்கள். காலந்தோறும் அடைந்துவரும் மாற்றங்களே இதற்கு சாட்சி.இந்துச் சமூகத்தில் நவீன கால மாற்றங்கள் ராஜாராம்மோகன் ராய் சதி வழக்கத்திற்கு எதிராக மறுமலர்ச்சி அடிப்படையிலான அறவியலைப் புகுத்துவதிலிருந்து தொடங்குகிறது. பால்ய விவாக மறுப்பு, பெண் கல்வி, பெண் விடுதலை என நவீனமடைந்துவரும் சூழலில் பழைமைவாதிகள் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் மத்திய காலப் பழமைகளை வலியுறுத்தத் தவறுவதில்லை.
தில்லி மாணவி வன்புணர்ச்சி குறித்த விவாதங்களில், அறிவுறுத்தல்களில் பா.ஜ.க.வினர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மட்டுமின்றிச் சமூகத்தில் எல்லாத் தரப்புப் பழமைவாதிகளும் ஆணாதிக்கவாதிகளும் பெண்கள் நாகரிக உடைகளை அணியக் கூடாது, இரவு நேரங்களில் பொது இடங்களில் நடமாடக் கூடாது என மத்திய கால மதிப்பீடுகளைத் திணிக்க முயன்றனர். மத்தியப் பிரதேச அமைச்சர் ஒருவர் பெண்கள் லட்சுமணன் கோட்டைத் தாண்டக் கூடாது எனக் கட்டளையிட்டார். சத்தீஷ்கர் மாநிலப் பெண்களுக்கான ஆணையத்தின் தலைவராகப் பதவிவகிக்கும் பெண்மணியோ வன்புணர்ச்சிகள் அதிகரித்துவருவதற்குப் பெண்களும் பொறுப்பேற்க வேண்டும் என்றார். வன்புணர்ச்சிகள் மேற்கத்திய நாகரிகத் தாக்கமடைந்த நகரங்களில் மட்டுமே நிகழ்கின்றன பாரதப் பண்பாடுடைய கிராமங்களில் அல்ல எனக் கூறும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்திற்குக் கௌரவக் கொலைகளும் தலித் பெண்கள்மீதான ஆதிக்கச் சாதியினரின் வன்புணர்ச்சிகளும் குற்றங்களல்ல போலும். மேலும் மனைவி கணவனுக்குக் கட்டுப்பட்டவள் எனப் பெண் அடிமைத் தனத்தைப் புதுப்பிப்பதற்கும் அவர் தயங்கவில்லை. பெண்களின் பாலியல் சுதந்திரம் குறித்த குஷ்புவின் கருத்திற்கு எதிராகத் தமிழ்ப் பண்பாட்டுக் காவலர்கள் திரண்டது இங்கு நினைவுகூரத்தக்கது.இஸ்லாமியச் சமூகங்களிலும் பெண்பாகுபாடு இன்றும் நீடித்தேவருகிறது. உத்திரப்பிரதேசம், ஹரியானா மாநிலங்களில் உள்ள இந்துக்களிடையே சில சாதிப் பஞ்சாயத்துகள் செல்போன் உபயோகிக்கவும் ஜீன்ஸ் உடை அணியவும் பெண்களுக்குத் தடைவிதித்ததைப் போல ராஜஸ்தான் மாநிலத்தில் உதய்ப்பூருக்கருகில் அன்ஜுமன் முஸ்லிம் பஞ்சாயத்து, தன் சமூகப் பெண்களுக்குச் செல்போன் உபயோகிக்கவும் திருமண விழாக்களில் பாடுவதற்கும் ஆடுவதற்கும் தடையிட்ட செய்தி சமீபத்தில் வெளியானது. (The Hindu, January 12, 2013). சட்டரீதியான உரிமையிருந்தும் இந்துப் பெண்கள் சொத்தில் சமபங்கு பெற முடியாததைப் போல முஸ்லிம் பெண்களும் Muslim Personal Lawவின்படி குறைந்த பங்கையே பெறுகிறார்கள். ஷாபானு வழக்கில் ஜீவனாம்ச உரிமையை உச்ச நீதிமன்றம் வழங்கினாலும் இஸ்லாமியப் பழமைவாதிகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆக, மதவேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட, பெண்களுக்கான உரிமைகள் என்ற அடிப்படையில் பொதுக் குடிமைச் சட்டம் (Common Civil Code) அனைத்து நிலைகளிலும் உள்ள பெண்களுக்குப் பாரபட்சமற்ற உரிமைகள் பெற வழிவகுக்கும் என வலியுறுத்துகிறார் ராமசந்திரா குஹா (Parliament and Patriarchy, Ramachandra Guna, The Hindu, December 31, 2012). ஷரியாவைக் குறிப்பிட்டுப் பலதார மணத்தை உரிமை கோரிய வழக்கொன்றில் தில்லி உயர் நீதிமன்றம் அளித்த முற்போக்கான விளக்கங்களை Islamic Forum for the Promotion of Moderate Thought என்ற அமைப்பின் பொதுச்செயலாளரான பேசூர் ரஹ்மான் வரவேற்கிறார் (The Hindu, January 11, 2013).
கௌரவக் கொலைகளை இன்றைய நவீன காலச் சட்டங்களைக் கொண்டு எதிர்கொள்வதைப் போல அனைத்து மதங்களிலும் நீடித்துவரும் மத்தியகால மதீப்பீடுகளையும் பழமையான மரபுகளையும் நவீனயுக அறவியலின் அடிப்படையில் மறுவரையறை செய்வதின் மூலமாகவே பெண்களுக்கான உரிமைகளை உறுதிப்படுத்த முடியும்.சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், பகுத்தறிவு, ஜனநாயகம் என முழங்கும் நவீன யுகம் இவற்றின் அடிப்படையில் நவீன அறவியலையும் கட்டமைக்கிறது. நவீன யுகத்தில் சமூகப் பொருளாதாரத்தின் மையவியக்கமாக ஆதிக்கம் செலுத்திவரும் நவீன முதலீட்டியமானது, நவீன அறவியலை உருமாற்றுவதாக, முன்நவீன முடியாட்சி அதிகாரங்களுடன் மதநிறுவனங்கள் கொண்டிருந்த அதிகாரத்துவ உறவுகளை முறித்துத் தனக்கான ஜனநாயக அமைப்புகளாக மீட்டெடுத்ததுடன் தனது மேலாதிக்கத்தைச் செயல்படுத்தக்கூடிய சமூகத் தன்னிலைகள், பாலியல்பு, அறிவியல், உடைமை உறவுகள், உற்பத்தி முறைமைகள் ஆகியவற்றைக் கட்டமைப்பதாகவும் இருக்கிறது. இவற்றின் விளைவாக, மிகவும் நவீனமடைந்ததாகவும் வளர்ச்சியடைந்ததாகவும் சொல்லப்படும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் ஏகாதிபத்தியங்களாகவும் சமூகக் குற்றங்கள், பாலியல் வன்கொடுமைகள் நீடிக்கும் சமூகங்களாகவும் இருக்கின்றன.
இந்தியாவில், தேசியக் குற்றங்கள் பதிவு ஆணையத்தின் (NCRB) புள்ளியியலின்படி 1995க்கும் 2011க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில், புதிய தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளைச் செயல்படுத்தத் தொடங்கிய வருடங்களில், வன்புணர்ச்சிக் கொடுமைகள் 50 சதவீதமும் கடத்தல் சம்பவங்கள் 100 சதவீதமும் வரதட்சணைக் கொலைகள் 50 சதவீதமும் குடும்ப வன்கொடுமைகள் மூன்று மடங்காகவும் பாலியல் இழிவுபடுத்தல் இருமடங்காகவும் அதிகரித்தன. எல்லாத் துறைகளிலும் முன்னேறிவரும் இந்தியப் பெண்கள் பொதுவெளிகளில் பங்கேற்பது அதிகரித்துவருகிறது. இச்சூழலில் பெண்களுக்கான பாதுகாப்பற்ற நிலை அதிகரித்துவருவது ஆட்சியாளர்கள் முழங்கிவரும் பொருளாதார வளர்ச்சியின் GDP வளர்ச்சியின் தோல்வியையே காட்டுகிறது.நாட்டின் முழுமையான வளர்ச்சிக்குப் பாலினச் சமத்துவம் அடிப்படையாக அமைய வேண்டுமென வலியுறுத்துகிறார் அமர்தியா சென். ஆனால் சமீபத்திய தரவுகளின்படி ஆண்களில் 82 சதவீதத்தினரும் பெண்களில் 65 சதவீதத்தினரும் எழுத்தறிவு பெற்றுள்ளார்கள். அமைப்புசார்ந்த பணிகளில் 20 சதவீதமாகவும் பொதுத்துறை நிறுவனங்களில் 17 சதவீதமாகவும் மத்திய அரசுப் பணிகளில் 10 சதவீதமாகவும் பெண்களின் பங்கேற்பு குறைவாகவே உள்ளது. மொத்தமுள்ள 634 உயர் நீதிமன்ற நீதிபதிகளில் 54 பேர் பெண்கள். 74 மத்திய அமைச்சர்களில் 8 பேர் பெண்கள். இவ் விதமாகப் பொருளாதாரத்திலும் அரசதிகாரத்திலும் பெண்களின் பங்கு குறைவாகவே உள்ளது. தனியார்மயமாகும் கல்வியும் வாழ்வாதாரங்களைப் பறிக்கும் புதிய தாராளமயமும் காலிப் பணியிடங்களை நிரப்பாத அரசின் கொள்கையும் பெண்களின் பங்கேற்பை மேலும் ஊக்குவிப்பனவாக இல்லை (Frontline, January 25, 2013).
இட ஒதுக்கீட்டு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் பெண்கள் உள்ளாட்சி அமைப்புகளில் சுதந்திரமாகச் செயல்படவும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதா நிறைவேறவும் ஆணாதிக்க உறுப்பினர்கள் உதவுவதில்லை.பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான கண்காணிப்புக் காமிராக்கள் பொருத்துதல், அதிகமான காவலர்களைப் பணியமர்த்துதல் உள்ளிட்ட காவல் துறைச் சீர்திருத்தத்திற்கும் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக மேலும் நீதிபதிகளை அமர்த்துவது, விரைவு நீதிமன்றங்கள் அமைப்பது உள்ளிட்ட நீதித்துறை மேம்பாட்டிற்கும் பேருந்துகளை அதிகமாக்குதல், சாலைகளை மேம்படுத்துதல், பொதுப்போக்குவரத்துச் சேவைகளை அதிகமாக்குதல் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கும் தேவையான நிதியை, ஏற்கனவே பொதுநலச் செலவுகளைச் சிக்கனப்படுத்திவரும் புதிய தாராளமய அரசுகள் எவ்விதம் திரட்ட முடியும்? புதிய தாராளமயத்தில் பொதுத்துறைச் சேவைகளிலும் உள்கட்டமைப்பு வசதிகளிலும் PPPஇன் அடிப்படையில் ஈடுபட்டுவரும் முதலீட்டிய நிறுவனங்கள் பாதுகாப்பை உறுதிசெய்வதைவிடவும் சேவைகளைத் திறம்பட அளிப்பதைவிடவும் இலாபமீட்டும் நோக்கத்திலேயே செயல்படுகின்றன.
புதிய தாராளமயத்தில் உச்சநிலை அடையும் முதலீட்டியம் எல்லாவற்றையும் வணிகமயமாக்குகிறது. உடைகள், சிகை அலங்காரம், அழகு சாதனங்கள் என அனைத்தையும் கார்ப்பொரேட்டுகளே தீர்மானிக்கின்றன. இவற்றுக்கான விளம்பரங்களும் ஃபேஷன் ஷோக்களும் அழகுப் போட்டிகளும் அழகு பற்றிய புனைவுகளை உருவாக்குகின்றன. சுஷ்மிதா சென், ஐஸ்வர்யா ராய் ஆகியோரை உலக அழகிகளாகக் கார்ப்பொரேட்டுகள் தேர்ந்தெடுத்ததும், இந்தியாவில் அழகுச் சாதனப் பொருட்ளின் விற்பனை வேகமாக அதிகரித்தது. அழகிப் போட்டிகள் சிறு நகரங்களுக்கும் கல்லூரிகளுக்கும் பரவிய உடை வடிவமைப்பு, உணவு கட்டுப்பாடு, நடையுடைபாவனைகள், அங்க அமைப்புகள் எனப் பெண்களின் மனநிலையில் Fashion/Beauty Complex எனும் உளவியல் சிக்கலை உருவாக்குகிறது. பெண்னை அழகுமயமாக்குதலின் மூலம் பெண் ஆளுமை அழகுக்குரியதாக மட்டும் வரையறுக்கப்படுகிறது.கார்ப்பொரேட்டுகளின் வர்த்தகத்திற்கான விளம்பரங்களும் கார்ப்பொரேட்டாக வளர்ந்துவிட்ட திரை உலகமும் சமூகத்தில் நிலவும் ஆண்மையப் பெண் பாலியல்பை முதலீட்டியத் தொழில்நுட்பங்களில் ஒன்றாகவே கையாளுகின்றன. பாலியல்பை மிகையாக்குதல், பாலுறுப்புகளுடன் உடலின் பிற உறுப்புகளையும் பால்மயமாக்குதல் ஆகியவற்றின் மூலம் பெண் உடல் பாலியல்புக்குரியதாக மட்டுமே கட்டமைக்கப்படுகிறது.
காலனிய ஆதிக்கத்தின்போது ஆட்சி நிர்வாக அமைப்புகளிலும் முதலீட்டிய நிறுவனங்களிலும் இந்தியச் சமூகத்தின் பங்கேற்பானது மத்திய கால ஆணாதிக்கச் சாதியப் படிநிலையின் சிதைவடையாத நகர்வாகவே தொடக்கத்தில் இருந்தது. பார்ப்பனரல்லாதாரின் சமூகநீதி, இட ஒதுக்கீடு, தாழ்த்தப்பட்டோரின் தலித் எழுச்சி ஆகியவற்றின் அடிப்படையிலான அடையாள அரசியல்கள் இந்தியாவின் நவீனச் சமூகத்தில், குடும்ப, சமூக, பொருளாதார நிலைகளில் சமநிலைகளை ஏற்படுத்தவில்லை. மாறாக, சாதிகளுக்கிடையிலான பூர்ஷ்வா வர்த்தகத்தையே தோற்றுவித்துள்ளது. மேல்சாதியினரின் ஆண்களே பெரும் முதலாளிகளாக வளர்ச்சி அடைந்தனர். இன்றைய நிலையில் வங்கிகளில் குவிந்துள்ள வைப்புத் தொகையில் பெண்களுடையது நான்கில் ஒரு பங்காகவே உள்ளது. ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள், வர்த்தக அமைப்புகள் எனக் குறைவாகத் தொழில்நுட்ப அறிவு தேவைப்படும் பணிகளிலேயே பெண்களின் பங்கேற்பு அதிகமாக உள்ளது.முதலீட்டியம் பெண்களின் முன்னேற்றத்திற்கும் உரிமைகளுக்கும் தடைகளை ஏற்படுத்துவதுடன் பெண்களை அழகுக்கான, பாலியல்புக்கான பொருளாகவும் இழிவுபடுத்துகிறது.
ஆணாதிக்கம், சாதிய மேலாதிக்கம், மத நிறுவனங்களின் ஒடுக்குமுறைகள், அரசதிகாரம், முதலீட்டியச் சுரண்டல் எனப் பன்முக மேலாதிக்கங்கள் செயல்படும் களமாகப் பெண் உடல் இருப்பதால், பெண்களின் அரசியலும் பன்முகமாக, பல்வேறு எதிர் அரசியல்களுடன் இணைவதாக உள்ளது.பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகத் தில்லிப் போராட்டங்களில் பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள், கலைஞர்கள், ஊழலுக்கு எதிரான குடிமைச் சமுகத்தினர் எனப் பலதரப்பினரும் பங்கேற்றனர். குடிமக்களின் அடிப்படையான உரிமைகளை, வாழ்வாதாரங்களை உறுதிப்படுத்துவதிலிருந்து விலகும் அரசுகளுக்கு எதிராகக் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட, தன்னெழுச்சியான குடிமை அரசியலின் எழுச்சி புதிய தாராளமயத்தின் தவிர்க்க முடியாத விளைவாகும்.
பிற எதிர் அரசியல்களுடன் இணையக்கூடிய பெண்ணிய அரசியலானது மேலாதிக்க அமைப்புகளில் சமமாகப் பங்கேற்பதற்கான அடையாள அரசியலாக இல்லாமல் அம்மேலாதிக்கங்களுக்கு எதிர்த் திசையில் குடும்ப, சமூக, பொருளாதார, அரசியல் உறவுகள் யாவற்றையும் மாற்றியமைக்கக்கூடிய மாற்றுக் கலாச்சார அரசியலாகச் செயல்பட வேண்டியதாகிறது. ஒடுக்கப்பட்டோரில் மற்றொரு பிரிவினரான தாழ்த்தப்பட்டோரின் தலித் அரசியலுக்கும் இது பொருந்தும். ஆணாதிக்க மதிப்பீடுகளுக்கு மாற்றாகச் சமநிலைக்கான விழுமியங்களைக் கட்டமைத்தல், சமநிலையான குடும்ப உறவுகளாக மாற்றுதல், பொருளாதார அடிப்படையாக வாழ்வாதாரங்களில் சம உரிமைகள் என்பதான பாலினச் சமத்துவம் என்பது மாற்றுக் கலாச்சாரத்திற்கான முன்நிபந்தனை அரசியலாகும்.




   

http://www.kalachuvadu.com/issue-158/page27.asp

No comments: