Tuesday, November 10, 2015

“ஆண்மை” அழிந்தால்தான் பெண்விடுதலை சாத்தியம் - ஆர். சந்திரா


 

ஆர். சந்திரா
periyar  எடுத்துக் காட்டாக, விபச்சாரி, மலடி, ஓடுகாலி, கணவனையிழந்த பெண்கள் என பெண்களுக்குப் பொருந்தக்கூடிய சொற்களுக்கு மாற்றாக ஆண்களை குறிக்க சொற்கள் இல்லை என்பதை நாம் காண்கிறோம். மொழி கூட இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டாகும்.
ஈ.வெ.ரா. பெரியார் 1934ஆம் ஆண்டு ‘பெண் ஏன் அடிமையானாள்?  என்ற நூலை எழுதினார்.; கடந்த 76 ஆண்டுகளில், ஏராளமானவர்கள் இந்நூலை பலமுறை வாசித்திருப்பார்கள். ஆய்வுகளுக்காக பயன்படுத்தியுள்ளனர். ‘‘பெரியாரிய பெண்ணியம் பலகல்லூரிகளில் மகளிரியல் துறைகளில் பாடமாகவே வைக்கப் பட்டுள்ளது. 64 பக்கங்களைக் கொண்ட இந்த சிறிய நூலில் பெண்ணடிமைத்தனத்தின் வேர்களை அடையாளம் காட்டியுள்ளார். பெரியார் இந்நூலில் கூறியுள்ள கருத்துக்களை மீண்டும், மீண்டும் வலியுறுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
அத்தியாயங்களைக் கொண்ட இந்த சிறிய நூலை ‘கற்பு’ பற்றிய விளக்கத்துடன் துவங்கி, பெண்ணடிமைத்தனத்திற்கான காரணங்களை அலசி, ஆராய்கிறார். ‘கற்பு’ என்பதன் அர்த்தம் சொல் தவறாமை என்று நோக்குகையில், அது இருபாலாருக்கும் பொதுவானதாகத்தானே இருக்க வேண்டும்? பாரதியாரும் இதையேதான் வலியுறுத்துகிறார். நடைமுறையில் கற்பு ஒரு தலைபட்சமாக பெண்ணுக்கு மட்டும் பொருந்தும் வண்ணம் பார்க்கப்படுகிறது. ஆனால், ஆரிய மொழியில் பார்க்கும் பொழுது ‘கற்பு’ என்ற சொல்லுக்கு அடிமை என்ற கருத்து நுழைக்கப்பட்டதாக அவர் கருதுகிறார். அதற்கான வரலாற்று சான்று உள்ளதா என்பதை அவர் குறிப்பிடவில்லை. அதுமட்டுமல்ல. ஆண்கள் கற்புடையவர்கள் என்பதைக் குறிக்க நமது மொழியில் வார்த்தை இல்லை என்கிறார். பெண் குறித்த வேறுசில சொற்களுக்கும் பெரியாரின் இந்த கருத்து பொருந்தும். எடுத்துக் காட்டாக, விபச்சாரி, மலடி, ஓடுகாலி, கணவனையிழந்த பெண்கள் என பெண்களுக்குப் பொருந்தக்கூடிய சொற்களுக்கு மாற்றாக ஆண்களை குறிக்க சொற்கள் இல்லை என்பதை நாம் காண்கிறோம். மொழி கூட இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டாகும். பெண்ணடிமைத்தன கருத்துக்களை பெண்களும் உள்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் சொல்கிறார்.
‘கற்பு’ பற்றி பெரியார் எழுதியதற்கு மறுப்பு எழுதியவர்க்கு பதிலளிக்கும் விதத்தில், ‘வள்ளுவரும் கற்பும்’ என்ற அத்தியாயத்தை எழுதியுள்ளார். வள்ளுவரின் குறள்களில் பிற்போக்கான, பெண்ணடிமை கருத்துக்களை எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்குகிறார். இடையே அவ்வையாரின் கருத்துக்களையும் பெரியார் விமர்சிக்கிறார். பெண் ஆணைச் சார்ந்தவள், ஆணைவிட தாழ்ந்தவள் என்பதை அவ்வையாரின் பாடல்களிலும், வள்ளுவரின் குறள்களிலும் காணமுடிகிறது. காலம் காலமாக ஆணுக்கும், பெண்ணுக்குமென பிரத்யேகமான குணங்கள் உள்ளன என்ற கருத்து ஆழமாக வேறூன்றி உள்ளது. (ஆண்-கோபம், வீரம், ஆளும்திறன். பெண் – சாந்தம், அமைதி, பேசும் திறன்) இந்த குணங்கள் ‘‘இருபாலாருக்கும் சமமாகவே இருக்க இயற்கையில் இடமும் இருக்கிறது’’ என்றும் ‘‘ஆண்களின் சுயநலத்தால் மாறுபட்டு வருகிறது’’ என்றும், ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.
periyar
‘காதல்’ பற்றிய அத்தியாயத்தில் காதல் புனிதமானது, தனித்தன்மை வாய்ந்தது என்றெல்லாம் கூறப்படுகிறது. காதலுக்கு அன்பு, ஆசை, நட்பு என்ற பொருளைத்தவிர வேறு… தனித்தன்மை இல்லையென்கிறார் பெரியார். ஒருவருக்கு ஒருமுறை காதல் ஏற்பட்டுவிட்டால், அது எந்தக் காலத்திலும் மாறாது என்பதைச் சொல்லி, பெண்கள் விரும்பாவிட்டாலும், கணவனுடன் வாழ நிர்பந்திக்கப்படுகிறாள்.. காதல் முதல் பார்வையில் தோன்றுமா? காதல் உயர்வானதா? காதலும் காமமும் வேறுவேறா? என பல வினாக்களை எழுப்புகிறார். இறுதியில், காதல், காமம் பற்றி பொறுப்பில்லாமல் பேசுவதால், இதைப்பற்றி தான் எழுதியுள்ளதாக கூறுகிறார். அன்பு, ஆசை, நட்பு என எதுவானாலும், அது மன இன்பத்திற்கும், திருப்திக்கும்தான் என்ற தனது கருத்தை அழுத்தமாக வெளிப் படுத்தியுள்ளார்.‘‘கல்யாண விடுதலை’’ என்ற அத்தியாயத்தில், திருமணம் பற்றி பெரியார் எழுதியுள்ள ஒவ்வொரு, வாக்கியமும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றால் மிகையாகாது. ‘‘பெண்களை ஆண்கள் அடிமையாகக் கொள்வதைத் தவிர்’’ நமது திருமணங்களில் எதுவுமில்லை என்றும் இதில் நமது நாட்டில் உள்ளது போன்ற கொடுமை உலகில் வேறெங்கும் இல்லையென்றும் கூறுகிறார்.
சடங்குகளை சாடுகிறார். விருப்பம் இல்லாவிடில் மணமுறிவு செய்து கொள்ளும் உரிமை ஆண் பெண் இருவருக்கும் வேண்டும் என்பதுடன் மறுமணம் தவறல்ல’’ என்ற அத்தியாயத்தில், மனிதவாழ்வில், மதம் ஆற்றும் முக்கியப் பங்கை விளக்குகிறார். மறுமணம் பற்றி எந்த மதத்திலும் ஆட்சேபணை இல்லை என்று கூறுவதுடன், எந்தப் பின்னணியில் மறுமணம் செய்து கொள்ளலாம் என்ற காரணங்களையும் விளக்குகிறார். இந்துக் கடவுள்களையும் முகமது நபியையும் மேற்கோள் காட்டத் தவறவில்லை. 10-12 வயதில் செய்விக்கப்படும் திருமணங்கள் திருமணமாகுமா? என்ற வினாவை எழுப்புகின்றார். அன்பும், ஆசையும் இன்றி இரண்டு பேர் எப்படி இணைந்து வாழ்வது? எதற்காக அப்படி வாழ வேண்டும்? சுயமரியாதைக் கொள்கைப்படி மறுமணம் விவாகரத்து பற்றிய கருத்துக்களையும் எடுத்துரைக்கிறார். திருமணம், மறுமணம், விவாகரத்து ஆகியவற்றில் ஆண்களுக்குரிய அனைத்து சௌகரியங்கள் உரிமைகள் பெண்களுக்கும் உண்டு என்று வாதிடுகிறார்.
‘விபச்சாரம்’ பற்றிய அத்தியாயத்தில், அதன் பொருள் அடிமை என்றுதான் கொள்ள வேண்டும் என்கிறார். இதில் பெண்ணே குற்றவாளியாக பார்க்கப்படுகிறாள். திட்டும்பொழுது கூட விபச்சாரியின் மகன் என்ற வசைவுகள் சாதாரணம். ஆண் இன்றி பெண் விபச்சாரம் செய்வதில்லை. ஆனால் இந்த சொல் பழக்கத்தில் பெண்களை குறிக்கும் சொல்லாகவே உள்ளது. கற்பு என்பதைப் போலவே இதுவும் பெண்களை அடிமை கொள்ள பயன்படுத்தப்படுகிறது. எந்த தொழிலானாலும், மற்றவர்க்கு கெடுதி கொடுக்கும் தொழில் நடக்கக்கூடாது என்பதுடன், இதனால், ஒழுக்கம் கட்டுப்பாடு கூடாது என்று கூற வரவில்லையென்றும் தெளிவுபடுத்துகிறார்.
கணவனையிழந்த பெண்கள் இந்தியாவில் அனுபவிக்கும் கொடுமைகளைப் பெரியார் சாடுகையில், மதம் ஆற்றும் பங்கையும் சுட்டிக்காட்டுகிறார். வுpதவைகள் உடல், மனரீதியில் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். பெரியாரின் தங்கை மகள் அம்மாயி சிறுவயதில் கணவனையிழந்துவிட்டாள். தனது குடும்பத்திற்குள்ளேயே பலரின் கடுமையான எதிர்ப்பையும் சந்தித்து, அந்த இளம் பெண்ணுக்கு மறுமணம் செய்து வைத்தார். இச்சமுதாயம், மனைவி இழந்த உடனேயே ஆணுக்கு மறுமணம் செய்வதை ஆதரிக்கிறது. ஆனால், ஒரு பெண் 10-12 வயதில் கணவனையிழந்தால் காலம் முழுவதும் கொடூரமான வாழ்க்கையை வாழ நேரிடுகிறது. பெண் விடுதலை பற்றி பேசுவோர் கூட, தங்கள் வீட்டுப் பெண்களை சிறையிலிட்டு கணவனையிழந்த தன்மையை காப்பாற்றுகின்றனர் என கடுமையாக சாடுகிறார். தவிர 1912ம் ஆண்டு கணக்கின்படி, வயதுவாரியாக
கணவனையிழந்த பெண்கள் எண்ணிக்கையை பெரியார் பட்டியலிட்டுள்ளார். மேலும், கணவனையிழந்த பெண்களின்  மறுமணத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறார்.
இந்தியாவில் பெண்ணடிமைத்தனத்திற்கும், பெண்ணின் தாழ்வான அந்தஸ்திற்கும், சொத்துரிமை இல்லாதது ஒரு முக்கிய காரணம் என்கிறார். சில மேலை நாடுகளை மேற்கோள் காண்பித்து, சொத்துரிமை கோரி பெண்கள் போராடுவது அவசியம், அவசரம் என்று கூறுகிறார்.
ஒன்பதாவது அத்தியாயத்தில் பெண் விடுதலைக்கு கர்ப்பத்தடை மிகவும் அவசியம். கர்ப்பம் பெண் விடுதலைக்கு பெரிய எதிரி என்கிறார். கர்ப்பத்தடைக்கான பிரச்சாரத்தை தமிழக சட்டசபைக்குள் சுகாதார மந்திரியே எதிர்த்தார். டாக்டர் முத்துலட்சுமி அம்மாள் மந்திரியை ஆதரித்தது ஏமாற்றமளித்தது என்று குறிப்பிடுகிறார். மதுவிலக்கு பிரச்சாரத்தைவிட தொத்து வியாதி ஒழிப்பு பிரச்சாரத்தைவிட கர்ப்பத்தடையை ஆதரித்து பிரச்சாரம் செய்வது மிகவும் முக்கியம் என்று கூறியுள்ளார்.
ஆண்மை’ அழிந்தால்தான் பெண் விடுதலை சாத்தியம் என இறுதி அத்தியாயத்தில் வலியுறுத்துகிறார்.; ஆண்கள்  பெண் விடுதலைக்கு பாடுபடுவதென்பது சூழ்ச்சி என்று கூறி, பூனைகளால் எலிகளுக்கும், நரிகளால், ஆடு, கோழிகளுக்கும் விடுதலை கிட்டுமா என்று வினவுகிறார். இது முரண்பாடான கருத்து. தமிழகத்தில் பெண் விடுதலைக்கு குரல் கொடுத்த ஆண்கள் பட்டியலில் பெரியாரும். பாரதியாரும் மிகவும் முக்கியமானவர்கள் என்பதை மறுக்க இயலுமா? பெண்களே பெண்விடுதலைக்குத் தடையாக உள்ளனர் என்கிறார். பிறந்தது முதலே பெண்கள் பெண்ணடிமைக் கருத்துக்களை கேட்டு, உள்வாங்கி, வளர்கின்றனர். அதை வலியுறுத்தும் வகையில் மதம், மூட நம்பிக்கைகள் பெண்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பெண்ணடிமை பெண்களை மட்டுமின்றி ஆண்களையும் பாதிக்கிறதென ஆண்கள் உணர்வதில்லை என்கிறார் பெரியார்.
எளிமையான நடை, பேசுவது போன்றே எழுதும் போதும் சொற்களை கையாளும் விதம், ‘நச்’ சென அழுத்தமாக தனது கருத்துக்களை வெளிப்படுத்துதல் பெரியார் எழுத்தின் சிறப்பம்சங்கள் அவரை வெறும் முற்போக்கு சிந்தனையாளர் என்று மட்டும் கூறினால் போதாது. பெண்ணடிமைத்தனம் வேறூன்றியுள்ள சமுதாயத்தில், பழமையில் ஊறிய சமுதாயத்தில், தைரியமாக தனது கருத்துக்களை கூறியவர். இன்றும் கருச்சிதைவு, கர்ப்பத்தடை போன்ற விஷயங்களை பேசத்தயக்கம் உள்ளது. ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில், ஆண்-பெண் சமத்துவம் பற்றி பேசுவதுடன், செயல்படுத்தும் துணிச்சல் பெரியாரிடம் இருந்தது.

http://www.oodaru.com/?p=3497

Sunday, November 8, 2015

பெண்ணியம் என்றால்... தோழர் கொற்றவை நேர்காணல்

Nirmala Kotravai kotravaiwrites@gmail.com
பெண்கள் ஆண்களுக்கு இணையாக அனைத்து துறைகளிலும் காலடி எடுத்து அசத்தி வந்தாலும் ஆங்காங்கே பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், உரிமை மீறல்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆண்களுக்கு இணையான சமத்துவம் அனைத்து நிலைகளிலும் பெண்களுக்கு கிடைக்க வேண்டும் என்பது பெண்ணிய முற்போக்கு சிந்தனையாளர்  களின் குரலாக இருக்கிறது. அவர்கள் பெண்களுக்கான தங்கள் கருத்துக்களை எழுத்திலும், பேச்சிலும் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்   களில் ஒருவர், நிர்மலா கொற்றவை. 

பி.எஸ்சி. விஷுவல் கம்யூனிகேஷன் படித்திருக்கும் இவர், ‘மாசஸ்’ எனும் அமைப்பை ஏற்படுத்தி பெண் உரிமைக்காக குரல் கொடுத்து வருகிறார். 

‘‘சினிமா, விளம்பரங்களில் பெண்கள் ஆட்சேபகரமாக சித்தரிக்கப்பட்டால் அதனை எதிர்த்து எங்கள் அமைப்பின் மூலம் குரல் கொடுத்து வருகிறோம். இணைய தளங்கள் மூலமும் விழிப்புணர்வு போராட்டங்களையும் அரங்கேற்றி வருகிறோம்’’ என்று கூறும் அவருடன் நமது கலந்துரையாடல்! 

பெண்ணியம் என்றால் என்ன?

‘‘பெண் என்ற காரணத்திற்காகவே அவளுக்கென்று சமூகம் சில விதிமுறைகளை வகுத்து வைத்திருக்கிறது. அதன்படிதான் நடக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறது. அது பெண்மைக்கும், பெண்களின் வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டையாக இருக்கிறது. பெண்களின் உண்மை நிலை, தேவைகள், உரிமைகள் பற்றி மக்களிடம் எடுத்துவைக்கும் சிந்தனைதான் பெண்ணியம்’’

நீங்கள் பெண்ணிய சிந்தனையாளராக உருவாக என்ன காரணம்?

‘‘நான் வாழ்க்கையை நன்றாக புரிந்துகொண்ட பின்பு, 35 வயதில் இருந்துதான் இந்த செயல்பாட்டில் இறங்கியிருக்கிறேன். எவ்வளவு திறமைகள் இருந்தாலும் திருமணத்திற்கு பிறகு பல பெண்கள் வீட்டுக்குள் முடக்கப்படும் நிலைதான் இருக்கிறது. உறவுகள் இருந்தாலும் புகுந்த வீட்டினர் அவளை ஒரு தனித்தீவுபோல் ஆக்கிவிடுகிறார்கள். வெளியே வேலைக்கு சென்றாலும், வீட்டிலும் உழைக்கும் இரட்டை உழைப்பை கொடுக்க வேண்டியிருக்கிறது. வீட்டில் இருப்பவர்கள் அத்தனை பேரையும் திருப்திபடுத்தும் பொறுப்பு அவளுக்கு வந்துவிடுகிறது. ஆடை அணிவதிலும் அவளுக்கு நிறைய கட்டுப்பாடுகள் உள்ளன.

ஒரு பெண் எந்த தவறு செய்தாலும், அவள் மீது எழுப்பப்படும் விமர்சனங்கள் அவளுடைய ஒழுக்கம் சார்ந்ததாக இருக்கிறது. ஆனால் ஆண் தவறு செய்தால், ‘அவன் பொறுப்பில்லாமல் இருக்கிறான். கல்யாணத்திற்கு பிறகு சரியாகிவிடுவான்’ என்கிறார்கள். பொறுப்பில்லாதவர் என்று முத்திரைகுத்தப்  படும் ஆணையும், பெண் திருமணம் செய்துகொண்டு சுமந்து, திருத்தவேண்டியதிருக்கிறது. அவள் குழந்தையை பெற்றெடுத்தபிறகு வேலையை விடவேண்டியதாகிவிடுகிறது. ஆணுக்கும் குழந்தை வளர்ப்பில் பங்கு இருப்பதை சமூகம் புரிந்து கொள்ள மறுக்கிறது. பெண் மட்டும் ஏன் இத்தகைய நிர்பந்தத்திற்கு ஆளாக வேண்டும்? என்று எனக்குள் எழுந்த கேள்வியே பெண்ணியத்தை பற்றி என்னை பேசவும், எழுதவும் தூண்டியது’’    

பெண், ஆணை சார்ந்திருக்கும் நிலையை எப்படி மாற்றப்போகிறீர்கள்?

‘‘பெண் என்பவள் ஆணுக்கு சேவை செய்ய பிறந்தவள் என்று காலம் காலமாக நம்ப வைத்து வளர்த்து வந்திருக்கிறார்கள். ஆணை சார்ந்தே அவளுடைய வாழ்க்கை சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அதேவேளையில் பெண்கள் கேட்கும் உரிமைகள் நியாயமானது என்பதை ஆண்களும், ஒட்டுமொத்த சமூகமும் புரிந்துகொள்ள வேண்டும். பெண்கள் சுயமாக முடிவெடுக்கும் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும். பொருளாதார, அரசியல், சமூக விழிப்புணர்வு பெற வேண்டும். ஒருவர் மற்றொருவரை சார்ந்திருப்பது அன்பினால் மட்டுமே நிகழ வேண்டும். அதிகாரத்தால் அந்த உறவு பிணைக்கப்பட்டிருக்கக்கூடாது. இதை பெண்கள் புரிந்துகொள்ளத்தொடங்கிவிட்டார்கள். அதனால் பெண்கள், ஆண்களை சார்ந்திருக்கும் நிலை மாறிக்கொண்டிருக்கிறது. இனியும் நிறைய மாற வேண்டும்’’

பெண்கள் முன்னேற்றத்திற்கு பெண்களே தடையாக இருக்கிறார்கள் என்று கூறப்படுவது பற்றி..?

‘‘பெண்ணுரிமை பற்றி பேசினால் பெண்களை தூண்டி விடுவதாக                     குற்றம்சாட்டுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். மேலும் பெண் 
உரிமைக்காக குரல் கொடுக்கும் பெண்கள் ஒழுக்க ரீதியாக விமர்ச்சிக்கப்படும் நிலையையும் எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது. பெண்  விடுதலைக்கு குரல் கொடுக்கும் ஆண்களும் இருக்கிறார்கள். அதனால் சமூகம்தான் தடையாக இருக்கிறது. ஆணாதிக்கம் என்று கூறுவதைவிட சமூக அமைப்பு சார்ந்த பிரச்சினையாகவே இதை கருதவேண்டும். பெண் முன்னேற்றத்திற்கு பெண்ணே தடை என்று கூறுபவர்கள்தான் பெண்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பார்கள்’’ 

பெண்ணியம் பற்றிய பேச்சு எப்போது முடிவுக்கு வரும் என்று நினைக்கிறீர்கள்?

‘‘குழந்தையை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பு கணவனுக்கும் இருக்கிறது. அந்த பொறுப்பை ஆண்கள் தட்டிக்கழிக்கக்கூடாது. பெண்கள் சம்பாதிப்பவர்களாக இருந்தாலும் அந்த பணத்தை தன் விருப்பப்படி செலவு செய்யும் உரிமை அவளுக்கு இல்லை. தன்னுடைய படிப்பு, எதிர்காலம் குறித்து முடிவெடுக்கும் உரிமையும் முழுமையாக அவளுக்கு கிடைப்பதில்லை. பெண் என்பதாலேயே பிரித்து பார்க்கும் நிலை மாறும்போது பெண்ணியம் பற்றி நிறைய பேசவேண்டியதும், எழுதவேண்டியதும் இருக்காது’’

இளைய தலைமுறையினரிடம் பெண்ணிய சிந்தனைகள் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது? 

‘‘இன்றைய படித்த பெண்கள் அரசியல், சமூக விழிப்புணர்வு பெற்றவர்களாக இருக்கிறார்கள். நான் சில இடங்களில் பெண்ணியம் பற்றி பேச சென்றபோது, ‘பெண்களுக்கு இப்போது என்ன பிரச்சினை இருக்கிறது. அவர்கள் படிக்            கிறார்கள். சம்பாதிக்கிறார்கள். அவர்களுக்கு என்ன குறை?’ என்று சிலர் கேட்கிறார்கள். பெண்களுக்கான சம உரிமை, பாதுகாப்பு பற்றி அவர்கள் யோசிப்ப தில்லை. தனியாக ஒரு பெண் சென்றால் ஒருவித பய உணர்வுடன்தான்         பயணிக்க வேண்டியதிருக்கிறது. எந்தவித அச்சமுமின்றி சுதந்திரமாக செல்லும் நிலை வர வேண்டும். இதைதான் நாங்கள் கேட்கிறோம். இளைய தலைமுறை பெண்கள், பெண்ணியத்தை கண்ணியத்தோடு வரவேற்கிறார்கள்’’ 

பெண்ணியவாதிகள் நிறைய உருவாக என்ன காரணம்?

‘‘முற்போக்கு சிந்தனையும், அரசியல், சமூக விழிப்புணர்வும் பெற்றவர்கள், நல்ல மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், பாதிக்கப்பட்டு போராட்ட களத்தில் இறங்குபவர்கள் பெண்ணியவாதிகளாக உருவாகுகிறார்கள். பெண்ணியவாதிகள் உருவாகிக்கொண்டே இருக்கவேண்டும்’’ 

பெண்ணிய கருத்துக்களிலும் அதி தீவிரம் காட்டுகிறவர்கள் இருக்               கிறார்களே?

‘‘நமக்கு தேவை சமூக மாற்றம்தான். அதை மிதமாக, மக்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் வழங்குவதே சரியானது. தீவிர கருத்துகொண்டவர்கள் ஆண்களை வெறுத்துப்பேசும் நிலையை அடைந்துவிடுகிறார்கள். அப்படிப்பட்ட நிலையை நான் ஏற்றுக்கொள்வதில்லை. ஆண்கள் இல்லாமல் சமூகம் இல்லை. மிதவாதியாக இருந்து அவர்களிடம் கருத்துக்களை எடுத்துவைத்தால் போதும். நல்ல மாற்றங்கள் ஏற்படும்’’

பெண்ணியவாதிகளின் குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும்? ஆண்கள் அவர்களை திருமணம் செய்துகொள்ள தயங்குவார்களா?


‘‘முற்போக்கு சிந்தனையுடைய கணவனும், மனைவியும் வாழ்க்கையில் இணையும்போது பிரச்சினை ஏற்பட்டால் பேசி தீர்த்துகொள்வார்கள். ஆண்களும் அதே சிந்தனையுடன் இருந்தால் இணைந்து போராடுவார்கள். இருவருக்குமிடையே புரிதல் இல்லாதபோது பிரியும் சூழ்நிலை உருவாகிவிடும். பெண்கள் யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை பெற்றோரிடம் தான் இருக்கிறது. திருமணம் என்பது அந்தஸ்து பார்க்கும் விஷயமாக மாறிக்கொண்டிருக்கிறது. அது இனிமையாக அமைகின்ற உறவாக இருக்க வேண்டும். இன்னொரு விஷயம் பெண்ணியவாதிகள் குடும்ப வாழ்க்கைக்கு எதிரானவர்கள் அல்ல. பெண்ணியவாதிகளின் மணவாழ்க்கையும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. உரிமையுள்ள மனைவியாக அவர்கள் குடும்ப வாழ்க்கை நடத்திவருகிறார்கள்’’

பெண்ணியவாதிகளால் சமூகத்திற்கு கிடைத்திருக்கும் பலன்கள்? 

‘‘பெண்ணியவாதிகள் நடத்திய பல போராட்டங்களால்தான் பெண்களுக்கு பாதுகாப்பும், பல்வேறு உரிமைகளும் கிடைத்திருக்கின்றன. பல சலுகைகள் கிடைக்கப்பெற்றிருக்கிறது. பெண்களை விழிப்புணர்வுமிக்கவர்களாக உருவாக்கியிருப்பதில் பெண்ணியவாதிகள் பெரும்பங்காற்றியிருக்கிறார்கள்’’ என்று கூறும்  நிர்மலா கொற்றவை கல்லூரிகள், சமூக அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பெண்களுக்கான உரிமைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்து உரையாற்றி வருகிறார். விருதும் பெற்றுள்ளார். 40 வயதான இவர் ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார். புத்தகங்கள் மொழி பெயர்த்துள்ளார். இவருடைய கணவர் வசுபாரதி. மகள் வருணா. சென்னை அடையாறில் வசித்து வருகிறார்கள்.

இணையப் பிரதி http://www.dailythanthi.com/News/Districts/Chennai/2015/11/01122936/Feminism-Polite.vpf

Sunday, October 25, 2015

தாலி கட்டாம வெளில போனா

mukawUl:
Varshini Mehta Devaki
 ·
குடும்பப் பெண் , குங்குமம் வைக்கலைனா, தாலி கட்டாம வெளில போனா கேடுகெட்டவ, விபச்சாரி! - சமுகம்
அப்ப ஆண்களுக்கும் அதே தானே?

பெண்களுக்கு புத்தக படிப்பு மட்டும் போதாது

பெண்களுக்கு புத்தக படிப்பு மட்டும் போதாது உலக அறிவும் தேவை...
- தோழி.அருந்ததிராய்